பீட்சா- 2 வில்லா – விமர்சனம்

43

மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது ‘வில்லா’.. கதை.. தன் தந்தை நாசரின் மரணத்துக்குப்பின் சொத்துக்கள் அனைத்தும் அவரது மகன் அசோக் செல்வன் கையைவிட்டு போகின்றன. ஆனால் பாண்டிச்சேரியில் மட்டும் ஒரே ஒரு வில்லா(மிகப்பெரிய பங்களா) இருப்பது தெரியவர அங்கே செல்கிறார் அசோக்.

முதலில் வில்லாவை விற்காமல் தாங்களே வைத்துக்கொள்ள நினைக்கிறார்கள் அசோக்கும் அவர் காதலி சஞ்சிதா ஷெட்டியும். ஆனால் அந்த பங்களாவில் நடக்கும் சம்பவங்கள் அவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன.

இதெல்லாம் ஏன் நடக்கிறது என ஆராய்ச்சி செய்யப்போக, அது கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக மாறுகிறது. இறுதியில் வில்லா என்ன ஆனது என்பதை ஒரு ட்விஸ்ட் வைத்த க்ளைமாக்ஸாக முடித்திருக்கிறார்கள்.

எழுத்தாளராக அசோக் செல்வன், அவரது காதலியாக சஞ்சிதா ஷெட்டி… இருவருமே பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வில்லாவில் காணப்படும் ஓவியங்களையும் அவை தன் வாழ்வில் நடத்தும் சூறாவளியையும் வெற்றிகொள்ள அஸ்வின் கடைசியில் எடுக்கும் எதிர்பாராத முடிவு அதிர்ச்சி என்றால் அதைத்தொடர்ந்து உடையும் ட்விஸ்ட் நம்மை ‘அட’ போட வைக்கிறது. போதாததற்கு சஞ்சிதா ஷெட்டியும் தருகிறார் இன்னொரு ட்விஸ்ட். படத்தில் சிறப்பு தோற்றத்தில் கொஞ்ச நேரமே வந்துபோகிற நாசர் மிரட்டல்.. எஸ்.ஜே.சூர்யா கலக்கல்..

படத்தின் திகில் காட்சிகளுக்கு கச்சிதமாக துணை சேர்ந்து நம்மை மிரட்டுகிறது சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை. தீபக் குமார்பதியின் ஒளிப்பதிவில் மங்கிய வெளிச்சத்தில் அந்த இரவு நேர பங்களாவே திகிலை கிளப்புகிறது.

பீட்சாவில் ரூட் போட்டுக்கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் ஒதுங்கிக்கொள்ள, இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் புதியவர் தீபன். வில்லாவில் நடைபெறும் சம்பவங்களுக்கு விஞ்ஞான ரீதியாக காரணங்களை ஆராயும் காட்சிகள் திக் திக் ரகம். குறிப்பாக பாஸிட்டிவ் எனர்ஜியை உருவாக்கவும் நெகட்டிவ் எனர்ஜியை குறைக்கவும் விஞ்ஞானி நடத்தும் ‘ஒலி’ சோதனையும் அதனைத்தொடர்ந்து ஏற்படும் பிரளயமும் ரணகளம்.

பீட்சா முதல் பாகத்தை பார்த்துவிட்டு அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த இரண்டாம் பாகத்துக்கு வருபவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஆனால் ஒண்ணே முக்கால் மணிநேரப் படத்தையும் போரடிக்காமல் த்ரில்லாக கொண்டு சென்றிருப்பதில் அறிமுக இயக்குனர் தீபன் பாஸ்மார்க் வாங்கிவிட்டார். வில்லாவை தாராளமாக ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம்.

Leave A Reply

Your email address will not be published.