தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் வெளியான, ‘அத்தரிண்டிகி தாரெதி’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. கடந்த 27ஆம் தேதி வெளியான இந்தப்படம், ஏழே நாட்களில் மொத்தம் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தெலுங்கில் ஒரு படம் சூப்பர்ஹிட்டானால் நம்ம ஹீரோக்கள் பார்வை அந்தப்பக்கம் திரும்பாமல் இருக்குமா என்ன? அதில் முதல் ஆளாக திரும்பியிருப்பது விஜய்யின் பார்வை தான்.
பெரும்பாலும் தெலுங்கில் மகேஷ்பாபுவின் ஹிட் படங்களை மட்டுமே தமிழில் ரீமேக் செய்து நடிப்பார் விஜய். சூப்பர்ஹிட்டான கில்லி, போக்கிரி, அட்டர் ஃப்ளாப் ஆன ஆதி என மூன்று படங்களும் மகேஷ்பாபு தெலுங்கில் நடித்தவைதான். ஆனால் மகேஷ்பாபு நடித்த தூக்குடு, பிஸினஸ்மேன் ஆகிய படங்கள் அங்கே சூப்பர்ஹிட் ஆனபோதும் கூட விஜய் அவற்றை ரீமேக் செய்ய முன்வராதது ஆச்சர்யம் தான். பொறுத்துப் பார்த்த அந்தப்படத்தின் தயாரிப்பாளர்களும் படத்தை தமிழில் டப்பிங் செய்து காசு பார்த்துவிட்டனர்.
ஆனால் இப்போது பவன் கல்யாண் நடித்துள்ள ‘அத்தரண்டிகி தாரெதி’ படத்தைப் பார்த்த விஜய் அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இத்தனைக்கும் இது அதிரடி ஆக்ஷன் படமும் இல்லை. கமர்ஷியலான, குடும்பகக் கதையை மிக்ஸ் பண்ணிய ஒரு ஸ்டைலிஷான படம் இது. அதனாலேயே தனக்கு இது ஒரு புதிய கலரை கொடுக்கும் என விஜய் நினைக்கிறார் போலும். தெலுங்கில் இந்தப்படத்தின் தயாரிப்பாளர், “சில விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இப்போது எதையும் என்னால் உறுதியாக சொல்லமுடியாது” என சூசகமான தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால் இன்னும் இரண்டு வராங்களில் இதுபற்றிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.