கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் போன்ற நகைச்சுவை படங்களை இயக்கிய கோவிந்தமூர்த்தி தற்போது இயக்கிவரும் படம் ‘பப்பாளி’. உலகத்தில் அழியாத சொத்து கல்வி தான். இந்த கல்வியால் மட்டமான வாழ்கையில் இருந்த கதாநாயகன் உயர் மட்டத்திற்கு போனானா இல்லையா என்பதுதான் பப்பாளி படத்தின் திரைக்கதை.
இயக்குனரின் முந்தைய படங்களைப்போல இதுவும் நகைச்சுவைப்படம்தான். வரிசையாக நகைச்சுவைப் படங்களாக எடுக்க அவர் சொல்லும் காரணம் தான் வித்தியாசமாக இருக்கிறது. அதையும் என்னவென்றுதான் கேட்போமே.. “இந்தியாவில் எப்பொழுதெல்லாம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைகிறதோ, அப்போதெல்லாம் காமெடி படங்கள் தான் வெற்றி அடைந்திருக்கின்றன. காரணம் மக்களை மன அழுத்தத்தில் இருந்து இவை விடுபடவைக்கின்றன.. அதேபோல இந்த ‘பப்பாளி’யும் மன அழுத்தத்தில் இருக்கும் மக்களை மீட்டு மகிழ்விக்கும். அதனால்தான் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்குகிறேன்” என்கிறார் மூர்த்தி.
‘மனம் கொத்திப்பறவை’ படத்தயாரிப்பாளர்களின் அடுத்த தயாரிப்பாக உருவாகி வருகிறது இந்த ‘பப்பாளி’. இந்தப்படத்தில் விஜய் டிவியின் சரவணன் – மீனாட்சி தொடரின் மூலம் புகழ்பெற்ற செந்தில் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இஷாரா நடித்திருக்கிறார். முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணன் நடிக்க மற்றும் இளவரசு, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, ஜெகன், கிருஷ்ணமூர்த்தி, கௌரவ வேடத்தில் நிரோஷா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். டிசம்பரில் ‘பப்பாளி’யை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.