2014ஆம் வருடம் நடைபெறவிருக்கும் 86-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான பிரிவில் போட்டியிட இந்தியாவிலிருந்து ‘குட் ரோடு’ என்ற குஜராத்தி மொழிப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது உங்களுக்கு தெரியும். அதுவும் இந்தியாவிலிருந்து இந்த வருடம் வெளியானவற்றில் சிறந்த இருபது படங்களில் இந்தப்படம்தான் தேர்வு குழுவினரால் செலக்ட் செய்யப்பட்டு ஆஸ்கர் ரேஸில் கலந்து கொள்கிறது.
ஆனால் இதேபோல இன்னும் 76 நாடுகளில் இருந்து மொத்தம் 76 படங்கள் இந்த வெளிநாட்டுப்பிரிவில் போட்டியிடுகின்றன. அதனால் உள்ளூரில் இருபதில் வென்றதை விட, வெளியூரில் இருந்துவரும் எழுபத்தைந்தை ‘குட்ரோடு’ வெல்லவேண்டும். மேலும் மால்டோவா, சவுதி அரேபியா, மாண்டெனெக்ரோ ஆகிய நாடுகள் முதன்முதலாக ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ள தங்களது படங்களை அனுப்பியுள்ளன.
இதில் ஹைலைட்டான இன்னொரு விஷயம் கடந்த ஐம்பது வருடங்களில் இதுவரை ஆஸ்கர் விருதில் கலந்துகொள்ளாத பாகிஸ்தானும் இந்தமுறை முதன்முறையாக போட்டியில் கலந்துகொண்டிருக்கிறது. ‘ஜிந்தா பாக்’ என்கிற பஞ்சாபி மொழிப்படம்தான் பாகிஸ்தான் சார்பாக போட்டியில் கலந்துகொள்கிறது. ஏற்கனவே கனடாவில் நடைபெற்ற உலகளாவிய தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் கலந்துகொண்டு நான்கு விருதுகளை அள்ளியிருக்கிறது இந்தப்படம். அதனால் முதன்முறையாக நம்பிக்கையுடன் இந்தப்படத்தை போட்டியில் கலந்துகொள்ள அனுப்பிவைத்திருக்கிறது பாகிஸ்தான்.