படங்களில் ஏதாவது புதுமையைச் செய்து ரசிகர்களை கவர்வது ஒருவகை. படத்தை ஆரம்பிக்கும் முன்னரே அசத்துவது இன்னொரு வகை. இல்லை பட விழாக்களில் புதுமை காட்டுவதும் உண்டு. அப்படித்தான் சமீபத்தில் கரு.பழனியப்பன் இயக்கியுள்ள ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் இசைவெளியீட்டை பேருந்தில் சென்று ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் ஒவ்வொரு பாடல் என வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். காரணம் படத்தின் கதை முழுவதும் ஒரு பேருந்தை மையமாக வைத்து சுழல்கிறது என்பதால் தான் இந்த ஏற்பாடு.
இதைவிட மலையாள சினிமாவில் ஒரு அதிரடியான புதுமையை அரங்கேற்றி இருக்கிறார்கள். ‘கட்டர்ஸ்’ என்ற படத்தின் படபூஜையை என்.ஹெச்-47 தேசிய நெடுஞ்சாலையில் வைத்து நடத்தி இருக்கிறார்கள். மெட்ரோ ரயிலும் மோனோ ரயிலும் போட்டிபோட்டுக்கொண்டு தலைப்புச்செய்திகளை ஆக்கிரமிக்கும் அதே நேரத்தில் அபாயகரமான, குண்டும் குழியுமான சாலைகளைப் பற்றி யாரும் வாய் திறப்பதே இல்லை. இந்த அவலத்தை பறைசாற்றும் விதமான கதைக்கருவுடன் உருவாகும் படம் தான் ‘கட்டர்ஸ்’.
அதனாலேயே இந்தப்படத்தின் பூஜையை எர்ணாகுளம் போகும் வழியில் நெட்டூர் ஜங்ஷனில் பளபளப்பான தேசிய நேடுஞ்சாலையில் வைத்து நடத்தி ரசிகர்களின் கவனம் ஈர்த்திருக்கிறார் படத்தின் இயக்குனர் சுமேஷ் நதாரியா. இதில் ஒரு பியூட்டி என்னவென்றால் இந்தப்படத்தின் பூஜையில் கேரள போக்குவரத்துத்துறை அவருடன் சேர்ந்து இன்னொரு அமைச்சரும் கலந்துகொண்டதுதான்.