பாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ். கடந்த 2010ஆம் வருடம் இந்தியில் பிரபலமான இந்த நிறுவனம் தயாரித்த படம் தான் ‘பேண்ட் பாஜா பாரத்’. இந்தியில் சூப்பர்ஹிட்டான இந்த ‘பேண்ட் பாஜா பாரத்’ திரைப்படம் இப்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
இந்தப்படத்திற்கு தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் ஹீரோவாக ‘நான் ஈ’ புகழ் நானி நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வாணிகபூர் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக இருந்த கோகுல் கிருஷ்ணா இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்திற்கு தரன் இசையமைக்கிறார். திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை மையப்படுத்தி இதன் கதை பின்னப்பட்டுள்ளது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.
இந்தியில் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது. தமிழிலும் அதுபோன்ற சாதனையை நிகழ்த்தினால் தான், தங்களது காலை கோலிவுட்டிலும் அழுத்தமாக ஊன்றமுடியும் என்பதால் இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறது யாஷ்ராஜ் ஃப்லிம்ஸ் நிறுவனம்.