காதலில் சொதப்புவது எப்படி படத்திற்கு பிறகு சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் மீதான வெளிச்சம் அதிகமாகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் தான் அருண் குமார். இவர் தான் ஏற்கனவே எடுத்துள்ள குறும்படத்தை தழுவி பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தை இயக்கிவருகிறார்.
பண்ணையார் ஒருவர் பியட் நிறுவனத்தின் பத்மினி மாடல் கார் மீது கொண்ட மோகத்தினை மையமாக வைத்து காமெடி படமாக உருவாக்கி வருகிறார் அருண்குமார். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ், சினேகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். பண்ணையாராக ஜெயபிரகாஷும், அவரது மகளாக சினேகாவும் நடித்துள்ளனர். அவரிடம் வேலைக்கு சேரும் ட்ரைவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் பண்ணையாரும் பத்மினியும் படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை நடிகர் நானி வாங்கியுள்ளார். ஏற்கனவே பீட்சா படத்தின் இந்தி ரீமேக் உரிமையை டேவிட் படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் வாங்கியுள்ளார் என்பதும், சூதுகவ்வும் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தெலுங்கில் போட்டாபோட்டியே நடக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.