‘நான் சிகப்பு மனிதன்’ – ஆடியோ ரிலீஸ் ஹைலைட்ஸ்

95


‘பாண்டியநாடு’ படத்தின் வெற்றிக்கு பிறகு பிறகு விஷால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

சைந்தவியின் பிரேயர் பாடலுடன் ஆரம்பித்த இந்த விழாவில் படத்தின் இரண்டு பாடல்களையும், படத்தின் டீஸரையும் திரையிட்டார்கள். ஏற்கனவே 25 வருடங்களுக்கு முன் இதே டைட்டிலில் நடித்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பிதழை கொடுத்ததோடு படத்தின் பாடல்களையும் போட்டுக்காட்டியிருக்கிறார்கள்.

படத்தின் கதைபற்றி அவர்களிடம் ஆர்வமாக விசாரித்து தெரிந்துகொண்ட ரஜினி படத்தின் வெற்றிக்கு முன்கூட்டியே தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது ரஜினியை விஷால், இயக்குனர் திரு, தனஞ்செயன், சோனி மியூசிக்கின் நிர்வாகி அசோக் பர்வானி ஆகியோர் சந்தித்த நிகழ்வை ஸ்லைடாக போட்டுக்காட்ட அரங்கமே அதிர்ந்தது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை தனஞ்செயன் வரவேற்க, விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ரம்யா. திருமணத்துக்குப்பின் முதல்முறையாக ரம்யா தொகுத்து வழங்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

இந்த விழாவில் இயக்குனர்கள் பாலா, ஹரி, விஷ்ணுவர்தன், ஏ.எல்.விஜய், சமுத்திரக்கனி உட்பட பலர் கலந்துகொண்டனர். விஷ்ணுவர்தன் பாராட்டிப்பேசும்போதுதான் கல்லூரியில் படித்த காலத்தில் விஷால் அவரது சீனியர் என்பது தெரிய வந்தது.

சுசீந்திரன் பேசும்போது பாண்டியநாடு படப்பிடிப்பின்போதே இந்தக்கதை தனக்கு தெரியும் என்றும் டிசம்பரில் படப்பிடிப்பை ஆரம்பித்து நான்கு மாதங்களில் படப்பிடிப்பை முடித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

வழக்கமாக விழாக்களில் குறைவாக பேசும் இயக்குனர் பாலா பேசவந்தபோது கொஞ்சநேரம் அதிகமாக பேசுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். பாலாவும் பேசினார்.. ஆனால் பாவம் தன்ஞ்செயன் தான் அவரிடம் வசமாக சிக்கிக்கொண்டார்.. பாலா பேசும்போது, “ஒவ்வொரு விழாவிலும் நானும் தனஞ்செயனும் சந்தித்துக் கொள்ளும்போது, சார் நாம் அடுத்த படம் சேர்ந்து பண்ணலாம் என தவறாமல் சொல்வார்.. ஆனால் அதன்பின் அவ்வளவுதான்.. பார்ப்போம், எப்போது படம் தருகிறார் என்று” என சொல்ல தனஞ்செயன் முகத்தில் வெட்கப்புன்னகை..

இந்தப்படத்தில் விஷாலுக்கு அடிக்கடி தூங்கிவிடுகிற மாதிரியான கேரக்டர்.. அது ஒரு பாடல்காட்சியில் நன்றாகவே தெரிந்தது. இதுபற்றி பேசிய இயக்குனர் விஜய், “தனது உதவி இயக்குனர் ஒருவருக்கு இந்த மாதிரி தூங்கும் பழக்கம் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

“படத்தில் விஷால் அடிக்கடி தூங்குவது போல காட்டினார்கள்.. இனி படம் வரும்வரை எனக்கு தூக்கம் இருக்காது..” என கலாய்த்தார் இயக்குனர் அட்லீ..

இயக்குனர் ஹரி, பார்த்திபன் ஆகியோரும் வாழ்த்திப்பேசினார்கள். விஷாலின் சகாக்களான விக்ராந்த், விஷ்ணு, ஜித்தன் ரமேஷ், சாந்தனு பாக்யராஜ் என அனைவரும் மேடையேற விஷ்ணு “நீ ஏன் லட்சுமிமேனனை என் கண்ணிலேயே காட்டாமல் அப்படி பாதுகாத்தாய்..? உனக்கும் லட்சுமி மேனனுக்கும் என்ன சம்பந்தம்? அதை இந்த மேடையில் சொல்லணும்” என விஷாலை அன்புடன் மிரட்டினார்.

அதற்கு பதிலளித்த விஷால், “லட்சுமி மேனனுக்கும் தனக்கும் இடையில் இருப்பது வெறும் நட்புதான் என்றும் இந்தப்படத்தில் லட்சுமிமேனன் நடிக்கும்போது தேவையில்லாமல் நீ படப்பிடிப்பு ஏரியாவுக்கு வந்திருந்தால் உன் அப்பாவின் கையாலேயே அரெஸ்ட் ஆகும் சூழ்நிலை உருவாகியிருக்கும் (விஷ்ணுவின் தந்தை போலீஸ் அதிகாரி).. அதை நான் தவிர்த்து உன்னை காப்பாற்றி இருக்கிறேன்.” என்று விஷ்ணுவை பதிலுக்கு கலாய்த்தார் விஷால்.

லட்சுமி மேனன் ப்ளஸ்-1 தேர்வு எழுதுவதால் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.. விழாவில் திரையிட்டுக் காட்டப்பட்ட இரண்டு பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருந்தார். இதுவரை தானே எழுதி பாடிவந்த கானா பாலா இப்போது முதன்முறையாக நா.முத்துக்குமார் எழுதிய பாடலை இந்தப்படத்தில் பாடியிருக்கிறார். படத்தின் ட்ரெய்லரை இன்னும் பத்து நாட்களில் வெளியிட உள்ளார்கள்

பாண்டியநாடு படத்தை போலவே இந்தப்படத்தையும் தமிழ்நாடு முழுவதும் வேந்தர் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. படத்தை ஏப்ரல்-11ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.