வித்தியாசமான தலைப்புகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதுதான் தயாரிப்பு நிறுவனங்களின் முதல் டர்கெட்டாக இருக்கிறது. அந்தவகையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என வித்தியாசமான படங்களைத் தயாரித்தது ‘லியோவிஷன்’ பட நிறுவனம். இவை ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிபெற்று வசூலையும் வாரிக்குவித்தன.
இப்போது இந்த நிறுவனம் புதுமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்கிறது. இந்தப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். காமெடியுடன், மக்களுக்கு நல்ல ஒரு கருத்தைக் கூறும் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் 26ஆம் தேதி முதல் தென்காசியில் துவங்க இருக்கிறது.