நடிகைகள் திருமணம் செய்துகொள்வதும் அதன்பிறகு கொஞ்சநாள் கழித்து நடிக்கவருவதும் சினிமாவில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். தமிழ்சினிமாவை பொறுத்தவரை திருமணமான நடிகைகளுக்கு அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் மலையாள சினிமா இதிலும் விதிவிலக்காகத்தான் இருக்கிறது. திருமணமானாலும் அவர்கள் கதாநாயகிகளாக நடிக்க தடையேதுமில்லை.
அந்தவகையில் காவ்யா மாதவன், மம்தா மோகன்தாஸ் இருவரைத் தொடர்ந்து நடிகை மஞ்சு வாரியரும் நடிக்கவருவதாக சில நாட்களாகவே ஒரு தகவல் உறுதி செய்யப்படாமல் பரவி வந்தது. காரணம் மலையாள முன்னணி நடிகர் திலீப்பை திருமணம் செய்துகொண்டு இனிமையான குடும்ப வாழ்க்கையை நடித்திவருகிறார் மஞ்சு. அதனால் மஞ்சு திரும்பவும் நடிக்க வருவதில் திலீப்பிற்கு விருப்பம் இல்லை என்று சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது மலையாளத்தில் தான் நடிப்பதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் மஞ்சு வாரியர். ரெஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மஞ்சு. ஏற்கனவே ஆறாம் தம்புரான், கண்மதம், சம்மர் இன் பெத்லகேம் உட்பட பல சூப்பர்ஹிட் படங்களில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார் மஞ்சு. ஆறாம் தம்புரான் அற்புதம் மீண்டும் ஒருமுறை நிகழுமா என்பதுதான் மஞ்சு வாரியர் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.