இந்த வருட ஆரம்பத்தில் தெலுங்கில் வெளியாகி சூப்பர்ஹிட்டாக ஓடிய படம் ‘சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு’. மகேஷ்பாபு, வெங்கடேஷ் என டாப் ஹீரோக்கள இருவர் முதன்முதலாக இணைந்து நடித்திருந்ததாலேயே இந்தப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என சொல்லலாம். மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக சமந்தாவும், வெங்கடேஷுக்கு ஜோடியாக அஞ்சலியும் நடித்திருந்தனர். பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் தெலுங்கில் நுழைவதற்கு அஞ்சலிக்கு இந்தப்படம் ஒரு சரியான பாதையையும் அமைத்து கொடுத்தது.
வழக்கமான மகேஷ்பாபுவின் அதிரடிப்படங்கள் போல இல்லாமல் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகியிருந்த இந்தப்படம் ஆந்திராவில் ஏற்படுத்திய வசூல் சாதனையை இது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை. இதன் தமிழ் ரீமேக் உரிமைக்காக நிறைய பேர் முயற்சி செய்தும் இந்த படத்தின் பட்ஜெட்டை கேள்விப்பட்டு பலரும் பின்வாங்கிவிட்டனர்.
வழக்கமாக மகேஷ்பாபுவின் ஹிட் படங்களை முதல் ஆளாய் வாங்கி ரீமேக் செய்யும் விஜய் கூட இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்பதால் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் இந்தப்படம் தற்போது ‘ஆனந்தம் ஆனந்தமே’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.கே.ராஜராஜா இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்கிறார். விஜி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தாளபள்ளி சந்திரசேகர் ,பிரசாத் இருவரும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.