லிங்குசாமி தனது படங்களில் ஹீரோயிசத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரோ அதே அளவு வில்லன்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். காரணம் பவர்ஃபுல்லான வில்லன்கள் இருந்தால்தான், அங்கே ஹீரோயிசம் எடுபடும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பவர் லிங்குசாமி. ‘ரன்’ அதுல் குல்கர்னி, ‘சண்டக்கோழி’ லால், ‘பையா’ மிலிந்த் சோமன் என அவரது வில்லன்களும் இதுவரை சோடை போனதில்லை.
அதனால் தற்போது சூர்யாவை வைத்து தான் இயக்கிவரும் படத்திற்கு இரண்டு முக்கிய நடிகர்களை பக்கபலமாக சேர்த்துள்ளார் லிங்குசாமி. ஒருவர் ‘துப்பாக்கி’ வில்லன் வித்யுத் ஜாம்வால். இன்னொருவர் ‘சமர்’ படத்தில் நடித்த இந்தி நடிகரான மனோஜ் பாஜ்பாய். இதில மனோஜுக்கு மெயின் வில்லன் வேடம். வித்யுத்துக்கு முக்கியமான ரோல். ஆனால் அது என்ன என்பது சஸ்பென்ஸாம்.
சத்யனும் தெலுங்கின் முன்னணி காமெடி நடிகர் பிரம்மானந்தமும் நகைச்சுவைப்பகுதியை தத்து எடுத்திருக்கிறார்கள். வரும் நவம்பர் 20ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு மும்பையில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதற்காக ஏற்கனவே லிங்குசாமி மும்பை சென்றுவிட்டார். தொடர்ந்து 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்தபின் அப்படியே கோவா செல்கிறது படக்குழு.