கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் ஆதாமிண்டே மகன் அபு. இந்தப்படம் அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சலீம்குமாருக்கு தேசியவிருதையும் வாங்கித் தந்தது. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் சலீம் அஹமது இயக்கியிருந்தார். ஹஜ் யாத்திரை செல்ல விரும்பும் முதியவர் அதற்காக என்னவெல்லாம் சிரமப்படுகிறார் என்பதையும், அவரால் யாத்திரை போக முடிந்ததா என்பதையும் மிக நுட்பமாக படமாக்கியிருந்தார் சலீம் அஹமது.
தற்போது சலீம் அஹமது மெகாஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள படம்தான் குஞ்சானந்தண்ட கதா. இந்தப்படத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஒன்றை நடத்துபவராக நடித்திருக்கிறார் மம்முட்டி. அவருக்கு ஜோடியாக துபாயை சேர்ந்த ரேடியோ ஜாக்கியான நைலா உஷா என்பவர் நடித்திருக்கிறார். திருப்தி இல்லாத குடும்ப வாழ்க்கையை நடத்துகின்ற, தனது கடையே உலகம் என்று வாழும் ஒரு மனிதனைப்பற்றிய கதைதான் இந்தப்படம்.
இன்று ரிலீஸாகும் இந்தப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரான மது அம்பாட் மற்றும் ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல பூக்குட்டி ஆகியோர் பணியாற்றியுள்ளதால் சலீம் அஹமதின் முந்தைய படத்தைப்போல இந்தப்படமும் தேசிய விருதை தட்டிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.