இனிமேல் சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் இயக்குனர் சாமி, தற்போது எந்தவித பரபரப்பும் இல்லாமல் ‘கங்காரு’ படத்தை இயக்கி வருகிறார். முகம் சுழிகவைக்கும் சர்ச்சைக்குரிய எந்தவித காட்சிகளும் இல்லாமல் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கும் படமாகவும் ஒரு அதேசமயம் அழகான காதலை மையப்படுத்தி இளைஞர்கள் ரசிக்கும்படியாகவும் படத்தை உருவாக்கியுள்ளார் சாமி.
இந்தப்படத்தில் புதுமுகங்கள் அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமையா, கலாபவன் மணி, நீண்ட நாட்களாக நடிப்பைவிட்டு ஒதுங்கியிருந்த இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிபை முழுக்க முழுக்க கொடைக்கானலில் நடத்தியிருக்கும் சாமி, இதற்காக கொடைக்கானலில் ஒரு மலை உச்சியில், ஒரு கிராமத்தையே செட் போட்டு அசத்தியுள்ளார்.
கதாநாயகன் தன் தங்கையை கங்காரு போல் கண்ணும் கருத்துமாக காப்பற்றுகிறார். தங்கை தன் அண்ணனை கங்காரு போல் காப்பாற்றுகிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் காதலி தன் காதலனை கங்காரு போல் காப்பாற்றுவார். அன்பை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை இது” என கங்காரு என்று படத்திற்கு பெயர்வைத்த காரணத்தை கூறுகிறார் சாமி.
நாகராஜசோழன் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். முதல் முறையாக இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார் பின்னணி பாடகர் ஸ்ரீநிவாஸ். அனைத்துப் பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.
அக்டோபர் 14ஆம் தேதியில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை, கவிப்பேரரசு வைரமுத்துவுக்கான பாராட்டு விழாவாக நடத்தமுடிவுசெய்துள்ளார்கள்.