தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ‘ராமையா வஸ்தாவையா’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், சமந்தா நடித்திருக்கின்றனர். ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார். ‘பாட்ஷா’ படத்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப்பிறகு இந்தப்படம் வெளியாவதால் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் ரொம்பவும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.
ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யவில்லை என்பது ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் படம் ரிலீஸான வெள்ளிக்கிழமையன்று ஆந்திரா முழுவதிலும் சேர்த்து 8.7 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் இரண்டாம் நாளோ அதன் வசூல் மூன்றில் ஒரு பங்காக அதாவது 2.7 கோடியாக குறைந்துவிட்டது. இதற்கு இயக்குனர் ஹரிஷ் சங்கர் தான் காரணம் என ரசிகர்களின் கோபம் அவர்பக்கம் திரும்பியுள்ளதாம்.
இன்னொரு பக்கம் ஒடிசாவை தாக்கியுள்ள பைலின் புயல் உருவானபோது அது ஆந்திராவையும் தாக்கலாம் என்ற அச்சம் உருவாகியிருந்ததால் அனைவரின் கவனமும் அதன் பாதிப்பில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதில்தான் இருந்தது. அதனால் தியேட்டர்களில் கூட்டம் குறைந்திருக்கலாம் என்றும் நேற்றும், இன்றும் தசரா கொண்டாட்டம் காரணமாக மீண்டும் தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் படத்தயாரிப்பாளர் தில் ராஜுவும் இயக்குனர் ஹரிஷ் சங்கரும் காத்திருக்கின்றனர். ஏதாவது அதிசயம் நடக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.