இந்திய சினிமாவின் நூற்றாண்டு நிறைவையொட்டி சென்னையில் தென்னிந்திய திரைப்படத்துறையின் சார்பில் செப்டம்பர் 21 முதல் 24 வரை நான்கு நாட்களுக்கு விழா கொண்டாடப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மாநிலத்தின் முதல்வர்களும் கலந்துகொள்ளும் இந்த விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்களுடன் பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இந்த விழாவை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 21 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். 23 ஆம் தேதி ஒட்டுமொத்த தென்னிந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், தான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின் சினிமா சம்பந்தப்பட்ட எந்த விழாவிலும் கலந்துகொள்ளாத தமிழக முதல்வர், முதன்முறையாக கலந்துகொள்ளும் திரைப்படவிழா இதுதான்.
இப்போது ஒரு ரசிகனாக சில கேள்விகள் நமக்கு எழுகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலின்போது நடிகர் வடிவேலு நடந்துகொண்டவிதமும் அதன்பின் சினிமாவில் இன்று அவர் இருக்கும் நிலையும் என்ன என்பது நமக்கு தெரியும். இந்த சூழலில் வடிவேலுவுக்கு அழைப்பு அனுப்பப்படுமா என்பதும் அப்படியே அனுப்பினாலும் அவர் இந்த விழாவில் கலந்துகொள்வாரா என்பதும் அப்படி கலந்துகொண்டாலும் வழக்கம்போல களைகட்டும் அவரது மேடை நிகழ்ச்சி எதுவும் இந்தமுறை இருக்குமா என்பதும் சந்தேகம்தான்.
அதேபோல தலைவா படத்தையொட்டி விஜய்க்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள் நாடறியும். தனது படத்தை ரிலீஸ் செய்ய உதவிய முதல்வருக்கு நன்றி என விஜய் சொல்லியிருந்தாலும் இந்த விழாவில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு இருக்குமா? அப்படி இருந்தாலும் அவருக்கான கௌரவமும் மரியாதையும் உரியமுறையில் தரப்படுமா என்பதும் கேள்விக்குறிதான்.
ரஜினி, கமல் இல்லாத ஒரு திரைப்பட விழாவை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. ஆனால் விஸ்வரூபம் பட பிரச்சனையின்போது படம் ரிலீஸாகாவிட்டால் நான் வீதிக்குத்தான் வரவேண்டும்’ என கமல் விடுத்த உருக்கமான ஸ்டேட்மெண்ட்டும் அதற்கு பதிலாக ‘நானா கோடிகளைக் கொட்டி படம் எடுக்கச்சொன்னேன்’ என முதல்வர் அளித்த பதிலும் யாராலும் மறக்க முடியாதவை. இந்த சம்பவம் கமலின் மனதில் ஒரு ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும். முதல்வர் முன்னிலையில் இந்த விழாவில் கலந்துகொண்டாலும் கமலின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதும் யூகிக்கமுடியாத ஒன்றுதான்.
1995ல் பாட்ஷா விழாவில் ரஜினி பேசிய பேச்சுக்குப்பின் நடந்த நிகழ்வுகளுடன் மேற்கூறிய அனைத்தையும் ஒப்பிட்டால் அதன் வீரியம் குறைவுதான்.. ஆனால் அவ்வளவு பிரச்சனைகளை சந்தித்த ரஜினியே ஒரு கட்டத்தில் கசப்பான விஷயங்களை மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு எனக்கு எல்லோரும் நண்பர்களே என்கிற மனோபாவத்துடன் அனைவரிடமும் நட்புக்கரம் நீட்டினார். அதனால் இந்த விழாவும், முதல்வருக்கும் நட்சத்திரங்களுக்குமான மனக்க்சப்பை நிச்சயம் போக்கும் என்று நம்புவோம்.