சமீபத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் ‘மூடர்கூடம்’. ‘பசங்க’ பாண்டிராஜின் சிஷ்யர் நவீன் எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகர்களில் ஒருவராகவும் நடித்திருந்தார். ‘நான்கு முட்டாள் திருடர்களைப் பற்றிய ஒரு சின்ன லைன்தான் ‘மூடர்கூடம்’ படத்தின் மொத்த கதையும்!.
ஆனால், இந்த கதையை காமெடியாக, கலர்புல்லாக, அதேசமயம் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருந்தார் நவீன். இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இயக்குனர் மணிரத்னத்தையே படம் பார்க்க தூண்டியது. இதனால் மணிரத்னம் படம் பார்ப்பதற்காக சிறப்புக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்தார் நவீன். படம் பார்த்த மணிரத்னமும் நன்றாக இருக்கிறது என பாராட்டிவிட்டுப்போனார்.
இப்போது இயக்குனர் ஷங்கரும் இந்த்ப்படத்தை பார்த்துவிட்டு மனம்திறந்து பாராட்டியுள்ளார். படத்தின் புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட் தன்னை கவர்ந்துள்ளதாகவும் இது ஒரு ‘ஸ்மார்ட் அட்டெம்ப்ட்’ என்றும் பாராட்டியுள்ளார். மேலும் தான் ‘சூதுகவ்வும்’, மூடர்கூடம்’ மாதிரியான படங்களை தயாரிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் தயாரித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவியதால் படத்தயாரிப்பை கொஞ்ச காலமாக ஷங்கர் நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மணிரத்னம், ஷங்கர் என ஜம்பவான்களின் பாராட்டுக்களால் திக்குமுக்காடி போயுள்ளார் நவீன்.