விஜய் நடித்த கில்லி படத்தை பார்க்காத நபர் இந்த தமிழ்நாட்டிலேயே இருக்கமாட்டார் என்று சொல்லுமளவுக்கு பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய வரலாறு நமக்கு தெரியும். தரணி இயக்கிய இந்தப்படத்தின் வெற்றி ரகசியமே ஜெட் வேகத்தில் பறக்கும் அதன் திரைக்கதைதான். அதுமட்டுமல்ல.. வித்யாசாகர் இசையில் விஜய், த்ரிஷா ஆட்டம் போட்ட அப்படிப்போடு பாடலும் இன்னொரு முக்கியமான காரணம்.
தற்போது இந்தப்பாடலை இந்தியில் அக்ஷய்குமார் நடித்துள்ள ‘பாஸ்’ என்கிற படத்தில் பயன்படுத்திருக்கிறார்கள் என்பதும் இதற்கு அக்ஷய்குமாருடன் சேர்ந்து பிரபுதேவாவும் ஆட்டம் போட்டிருக்கிறார் என்பதும் பழைய செய்திகள். ஆனால் ஒரு விஷயத்தை கவனித்துப்பார்த்தால் அதுமட்டும் புதிதாக தெரியும். அதாவது இந்தப்பாடலில் தான் ஆடியுள்ள நடனத்தில் கூடுதல் எனர்ஜியுட்ன ஸ்டெப்புகளை போட்டிருக்கிறார் அக்ஷய் குமார்.
அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. தமிழில் ‘அப்படிப்போடு’ பாடலுக்கு நடனத்தை வடிவமைத்தவர் பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் தான். தற்போது இந்தியில் நடனம் அமைத்திருப்பவர் தம்பி பிரபுதேவா. இந்தப்பாடலை ரீமேக் பண்ணும்போது தமிழில் இருந்த அதே ஹைஸ்பீட் ஸ்டெப்புகளை மாற்ற விரும்பாமல் இதிலும் வைத்துவிட்டார் பிரபுதேவா. அதாவது அண்ணன் காட்டிய வழியில் ஆட்டம் போட்டிருக்கிறார் பிரபுதேவா.