மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கேரக்டர்களை தானே விரும்பி நடித்துவிட்டுப் போகிறவர்தான் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். அவர் நடித்த ‘ரதிநிர்வேதம்’ சமீபத்தில் வெளியான ‘களிமண்ணு’ ஆகிய படங்களில் அதை நிரூபித்தும் காட்டியிருப்பார் ஸ்வேதா மேனன். களிமண்ணு படத்திற்காக, ஸ்வேதாமேனன் தனது நிஜமான பிரசவத்தை படமாக சம்மதித்து ஒரு புரட்சியையே ஏற்படுத்தினார். இதற்கு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து படத்துக்கு தடை கேட்டு போராட்டம் நடத்திய சம்பவமெல்லாம் கூட நடந்தது.
ஸ்வேதா மேனன் தற்போது ‘கேள்வி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாரிக்கப்படும் இந்த படத்தை ஹாசிம் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மனோஜ்.கே.ஜெயன். இந்த வருடத்தின் இறுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.
இந்தப்படத்திற்கான கதையை ஸ்வேதா மேனன் தான் எழுதியிருக்கிறார் என ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை மறுத்துள்ள ஸ்வேதா மேனன் படத்தில் மட்டும்தான், எழுத்தாளர் கதாபாத்திரம் ஏற்றிருப்பதாகவும் நிஜத்தில் அல்ல என்றும் கூறியுள்ளார். சினிமாவை பின்புலமாக வைத்து உருவாகியுள்ள இந்தபடத்தின் கதை சில வருடங்களுக்கு முன் ஒரு கதாசிரியர், ஒரு இயக்குனர் மற்றும் ஒரு நடிகை ஆகியோருக்கு இடையே நடந்த சம்பவங்களின் தொகுப்பாக உருவாகி இருக்கிறதாம்.