சிம்பு தற்போது கூட்டணி அமைத்திருப்பது ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜூடன். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயினை வலை வீசி தேடிக்கொண்டு இருக்கிறார் பாண்டிராஜ். இதில் உலகமகா ஆச்சர்யமாக நயன்தாரா தான் ஹீரோயினாக நடிப்பார் என தெரிகிறது.
இப்படி சொல்வதற்கு காரணம் இருக்கிறது. இந்தப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் கிடைக்காதது பற்றி இயக்குனர் பாண்டிராஜ் ஏற்கனவே, “சிம்புவுக்கு பொருத்தமான தேவதை மாதிரி பெண்ணைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் அவர் யாரென்று தான் இதுவரை எங்களுக்கே தெரியவில்லை” என்று சில தினங்களுக்கு முன் ட்வீட் செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று நயன்தாராவின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு இயக்குனர் பாண்டிராஜ் ட்விட்டரில் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘தேவதை நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என குறிப்பிட்டிருந்தார். தேவதை மாதிரி ஒரு ஹீரோயின் வேண்டும் என முன்பு குறிப்பிட்ட பாண்டிராஜ், இப்போது நயன்தாராவை தேவதை என குறிப்பிட்டு வாழ்த்து அனுப்பியிருக்கிறார். ரெண்டும் ரெண்டும் நான்கு என்பதுபோல நயன்தாரா தான் இந்தப்படத்தில் சிம்புவின் ஹீரோயின் என பளிச்சென்று தெரிகிறது. இருந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்போது உண்மை தெரிந்துவிடப்போகிறது.