வளர்ந்துவரும் நேரத்தில் எதற்காக இப்படிப்பட்ட பிரச்சனைகளில் தெரிந்தே சிக்குகிறார் நமது அறிமுக இளம் ஹீரோ கௌதம் கார்த்திக்?. அவரது தந்தையாவது எடுத்து சொல்லியிருக்கலாமே. ஒரே நேரத்தில் இரண்டு என்ன, மூன்று, நான்கு படங்களில் கூட ஒரு ஹீரோ நடிக்கலாம். இதோ இப்போது விமல் நடிக்கவில்லையா அந்த மாதிரி. எல்லாப்படங்களிலும் ஒரே மாதிரியான கெட்டப்பில் நடிப்பதால் அவருக்கு கண்டினியுட்டியில் பெரிதாக மாற்றமோ வித்தியாசமோ தெரியாது.
ஆனால் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஹீரோக்கள், ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும்போது இரண்டு படங்களின் கண்டினியுட்டி பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.. ஆனால் ‘சிப்ப்பாய்’, ‘வை ராஜா வை’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் கௌதம் அதை செய்யத் தவறியதுதான் இப்போது பிரச்சனையாக மாறியுள்ளது.
சிலம்பாட்டம் சரவணன் இயக்கும் ‘சிப்பாய்’ படத்தில் கௌதமுக்கு நீளமான சுருள்சுருளான ஹேர்ஸ்டைல். ஆனால் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் ‘வை ராஜா வை’ படத்தில் அவருக்கு முடியை ஒட்ட வெட்டி இருக்கும்படியான ஹேர்ஸ்டைல். அதனால் இந்தப்படத்தில் நடிக்கும்போது முடியை வெட்டியாக வேண்டும். வெட்டியும் விட்டார் கௌதம்
வேறு வழியில்லாமல் சிப்பாய் படத்திற்காக இவரது ஹேர்ஸ்டைல் போலவே விக் ஒன்றை தயார் செய்து, சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தியும் பார்த்தார்கள். அதுகூட லாங்ஷாட்டில் தான். ஆனால் இயக்குனர் சரவணனுக்கு இதில் உடன்பாடும் இல்லை. எடுத்த காட்சிகளில் திருப்தியும் இல்லை. அதேபோல ‘வை ராஜா வை’ படத்திற்கும் விக் வைத்து பார்க்க அங்கேயும் செட்டாகவில்லை.
இதனாலேயே ‘சிப்பாய்’ படப்பிடிப்பின்போது கௌதமும் இயக்குனர் சரவணனும் நேருக்கு நேர் முகம் பார்த்துக்கூட பேசுவது இல்லையாம். பேச வேண்டியதை எல்லாம் உதவி இயக்குனர்கள் மூலமாகத்தான் பேசிக்கொள்கிறார்களாம். வளர்ந்து வரும் நேரத்தில் அதுவும் இந்த சின்ன வயதில் இதுபோன்று நடந்து கொள்வது கௌதமுக்கு மைனஸ் பாய்ண்ட் எனபதை யார் எடுத்துச் சொல்வது?