கடந்தவாரம் வெளியான ‘குக்கூ’ திரைப்படம் திரையுலகத்தினரிடம் மட்டுமல்லாமல் நல்ல படங்களை பாரபட்சமின்றி ரசிக்கும் ரசிகர்களிடமும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது முதல் படைப்பாக பார்வையற்றவர்களின் வாழ்க்கையை படமாக்கிய இயக்குனர் ராஜு முருகனின் நம்பிக்கை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்தப்படம் யாரை மையப்படுத்தி எடுக்கப்பட்டதோ அவர்களும் இந்தப்படத்தை பார்க்கும் விதமாக 25 பார்வையற்றவர்களை அரவிந்த் என்பவர் தான் நடத்தி வரும் ‘ரெயின் ட்ராப்ஸ்’ என்கிற சேவை அமைப்பின் மூலமாக பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். கடந்த திங்களன்று(மார்ச்-24) சத்யம் தியேட்டரில் மாலைக்காட்சியில் இவர்கள் படம் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த ரெயின் ட்ராப்ஸ் அமைப்பின் தூதராக இருக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா தான் இதற்கான ஆயத்தங்களை முன்னின்று செய்தவர். இந்தக்காட்சியின்போது படத்தின் இயக்குனருடன், படத்தில் பார்வையற்றவராகவே வாழ்ந்திருந்த ‘அட்டகத்தி’ தினேஷ், படத்தின் ஒளிப்பதிவாளர் வர்மா மற்றும் ஏ.ஆர்.ரெஹைனா ஆகியோரும் பங்கேற்றார்கள்.
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள தன்னம்பிக்கை தரும் வசனங்களும் படத்தின் பாடல்களும் பார்வையற்றவர்களின் செவிகளை நிச்சயம் குளிரவைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Comments are closed.