ஒரு படத்தில் வடிவேலு சொல்வார், “வெளிய தெரியறது என்னோட ஒரு ரூபம்.. ஆனா உள்ள பல ரூபங்கள் ஒளிஞ்சிருக்கு” என்று. கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து இயக்கிவரும் ‘அனேகன்’ படத்தின் கதைக்கும் கிட்டத்தட்ட இந்த வசனம் நன்றாகவே பொருந்துகிறது. அனேகன் என்றால் பல்வேறு சக்திகளை உள்ளடக்கிய மனிதன்’ என்று அர்த்தமாம்.
அதற்கேற்ற மாதிரி இந்தப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் தனுஷ். இப்போது தாடியுடன் கூடிய கெட்டப்பில் நடித்து வரும் தனுஷை இன்னும் பலவிதமான தோற்றங்களில் எப்படி மாற்றலாம் என வடிவமைப்பு செய்துகொண்டிருக்கிறார் கே.வி.ஆனந்த்.
இதுவரை ஆக்ஷன் படங்களில் மட்டும் அதிகம் கவனம் செலுத்திவந்த கே.வி.ஆனந்த் முதன்முறையாக ரொமாண்டிக் ஏரியாவில் புகுந்து விளையாட இருக்கிறார். படம் த்ரில்லர் வகையை சேர்ந்தது என்றாலும் காதல் காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்கிறார் கே.வி.ஆனந்த்.
இந்தப்படத்திற்காக சில ஆக்ஷன் காட்சிகளை சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் படமாக்கி வந்திருக்கிறார்கள். மும்பைப் பெண்ணான கதாநாயகி அமிரா, இயக்குனர் சொல்லிக்கொடுக்கும் வசனங்களை மனதில் பதியவைத்துக்கொண்டு, ஸ்பாட்டில் அதை அப்படியே உணர்ச்சிகரமாக வெளிப்படுத்துவதை பார்த்து ஆச்சர்யப்படுகிறது பட யூனிட்.