சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கிவருகிறது ஜெயகுரு சேவா டிரஸ்ட் நடத்தும் தீபம் ஸ்பெஷல் சில்ரன்ஸ் பள்ளி. இதில் உள்ள ஸ்பெஷல் சில்ரன்களுக்காக, இந்தியாவில் முதன்முறையாக தொடர்ந்து 60 நிமிடங்களுக்கு ஜீ மைம் ஸ்டுடியோ சார்பில் “மா” என்கிற பெயரில் மைம் ஷோ ஒன்றை சமீபத்தில் நிகழ்த்திக்காட்டினர் விஜய் டிவி புகழ் மைம் கோபி குழுவினர். இந்த நிகழ்ச்சியில் 8 வயதில் இருந்து 35 வயது உடைய மைமிங்கில் அசாத்திய திறமை கொண்ட நடிகர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை எழும்பூர் மியூசியம் திரையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பிரபுசாலமன், நடிகர் சிவகார்த்திகேயன், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய இயக்குநர் பிரபுசாலமன், கோபியின் மைம் குழுவினரின் நிகழ்ச்சியை பாராட்டிப் பேசியதோடு அந்த ஸ்பெஷல் சில்ட்ரன்களுக்கு உதவும் விதமாக 25,000 ரூபாயை வழங்கினார்.
“நாங்கள்லாம் படாதபட்டு பண்ற விசயங்களை நீங்க அசால்ட்டா பண்றீங்க. அதுவும் முகத்துல வெள்ளை மை பூசிக்கிட்டு, சவுண்ட் விடாம மௌனமா நீங்க அசத்துறீங்க. அந்த தெய்வக்குழந்தைகளுக்காக இந்த நிகழ்ச்சியை நடத்துற மைம் கோபிக்கும் அவரோட குழுவினருக்கும் என்னோட பாராட்டுக்கள்” என மனம் நெகிழ்ந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
மேலும், “நீங்கள்லாம் இவ்ளோ அசத்தலா நடிக்கிறதைப் பார்க்கும்போது நடிப்புல நான் இன்னும் நெறைய கத்துக்கணும்ங்கிறது புரியுது” என்றும் பேசினார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கிவருகிற இந்த பள்ளி குறித்த மேலும் விபரங்களுக்கு, http://www.deepamspecialschool.org/ இணையதளத்தை பார்க்கவும்.