பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள்தான் எப்போதும் ட்ரெண்ட் செட்டர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது வேகமாக வளர்ந்து வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார், இந்த ட்ரெண்டையே அடியோடு மாற்றியுள்ளார். அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்து கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
இந்த மூன்று படங்களால் சி.வி.குமாருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது மறுக்கமுடியாத உண்மை. அவருடைய முதல் தயாரிப்பான ‘அட்டகத்தி’ ரொமாண்டிக் காமெடி என்றால் அடுத்த படமான பீட்சா ஹாரர். மூன்றாவது படமான சூதுகவ்வும் கமர்ஷியல் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இருக்குமாறு கதைகளை தேர்ந்தெடுத்திருப்பது சினிமாவில் ஒரு நீண்ட பயணத்துக்கான தெளிவான அயுத்தமாகத்தான் தெரிகிறது. மேலும் குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையே தனது லட்சியமாக வைத்துள்ள சி.வி.குமார், முதல் படம் வெளியானபோதே தன்மீது உருவான எதிர்பார்ப்பை மிகச்சரியான முறையில் பூர்த்தி செய்து வருகிறார்.
தமிழகத்தில் ஏழு இடங்களில் அலுவலகம் வைத்து ட்ராவல்ஸ் நடத்திய சி.வி.குமாருக்கு அந்த பிஸினஸுடன் வேறு எதாவது ஒரு பிஸினஸ் செய்யலாம் என்று தோன்றியபோது தான் மீடியாவில் இருக்கும் நண்பர்கள் மூலமாக 2011ஆம் ஆண்டு இந்த தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தார். இதுவரை இவர் தயாரித்த படங்களை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கி வெளியிட்டதுடன் அவற்றின் மூலம் நல்ல லாபமும் சம்பாதித்தன. இன்னும் பல தயாரிப்பு நிறுவனங்கள் இவரது தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படங்களை வாங்குவதற்காக வரிசைகட்டி நிற்கின்றன.
தற்போது ஹாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்தும் படங்களை தயாரிக்க இருக்கிறார் சி.வி.குமார். இதுபற்றி சி.வி.குமார் கூறும்போது “நான் முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றபோது பாக்ஸ் ஆபீஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்களை ஏக்கத்தோடு பார்த்திருக்கிறேன். இப்போது அதே நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. எனது கனவு இப்போது நிஜமானது. எனது படங்களின் வெற்றி ரகசியம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு படத்துக்கும் கடுமையாக உழைக்கிறேன். திட்டமிட்டு பணியாற்றுகிறேன்” என்கிறார்.
சி.வி.குமார் தயாரிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் படம் ‘பீட்சா-2’. இந்த படத்தைத் தொடர்ந்து ‘பட்டிணம்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார் சி.வி.குமார். தொடர்ந்து இளன் பாண்டியன் என்பவர் இயக்கிய ‘வி-சித்திரம்’ என்ற குறும்படத்தை அதே பெயரில், அதே இயக்குனரை வைத்து திரைப்படமாக எடுக்க இருக்கிறார். தமிழ்சினிமாவில் படத்தயாரிப்பின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ள சி.வி.குமார் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க நமது Behind Frames வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
– சின்னமனூர் விஜயகுமார்