நடிகர்கள் அனைவருமே ஒரு படத்திலாவது போலீஸ் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்பது லட்சியமாகவே வைத்திருப்பார்கள். அதேபோல சில நடிகைகளுக்கும் போலீஸ் கேரக்டரில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கதான் செய்யும். நடிகர்களுக்கு இருக்கும் அதே ஆசை நடிகைகளுக்கு மட்டும் இருக்காதா என்ன? குறிப்பாக விஜயசாந்தி வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்தில்போலீஸ் அதிகாரியாக கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியபின் பல நடிகைகளுக்கு ஒரு படத்திலாவது நாம் போலீஸ் அதிகாரியாக நடிக்க மாட்டோமா என்ற ஆசை அதிகமாகவே ஆகிவிட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பும் நேரமும்தான் கைகூடிவரவேண்டும்.
இப்போது பாவனாவுக்கு மலையாளப்படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிரபல இயக்குனர் பத்மகுமார் இயக்கும் இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் அரசியல்வாதியாக நடிக்கிறார். கேரள அரசியல் மற்றும் காவல்துறையின் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையில் கதையை அமைத்திருக்கிறார் பத்மகுமார். இந்தப்படத்தின் மூலம் பாவனாவின் போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் ரொம்பவே பேசப்படும் என்கிறார் இயக்குனர் பத்மகுமார்.