மோகன்லால் நடித்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் வெற்றிபெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட இருப்பது தெரியும். இங்கே இன்னும் பேச்சளவிலேயே காரியங்கள் நடந்துகொண்டிருக்க அங்கே செயலில் இறங்க களத்தில் குதித்துவிட்டார் இயக்குனர் பி.வாசு. கன்னடத்தில் தயாராகும் ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கை பற்றித்தான் சொல்கிறோம்.
இதில் கமல் நடிக்கிறார் என்பது மட்டும் தான் உறுதியாகி இருக்கிறது.. ஆனால் தற்போது ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் லிங்குசாமி தயாரிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்ட கமல் அதை முடித்துவிட்டுத்தான் இந்தப்படத்திற்கு வரமுடியும்.
ஆனால் இதே படத்தின் கன்னட ரீமேக்கை இயக்கும் பி.வாசு களத்தில் சுறுசுறுப்பாக இறங்கிவிட்டார். கதாநாயகனாக ரஜினியுடன் ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ படத்தில் நடித்தாரே, அந்த ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் மலையாளத்தில் சித்திக் நடித்த முக்கியமான கதாபாத்திரத்தில் இளையதிலகம் பிரபு நடிக்கிறார். நேற்றுமுன் தினம் கர்நாடகா மாநிலம் கூர்க் பகுதியில் இதன் படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார் வாசு.
மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘மணிச்சித்திரதாழு’ படத்தை கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் ரீமேக் செய்து ஹிட்டாக்கி, பின்னர் அதனை தமிழில் சந்திரமுகி’யாக மாற்றி ரஜினியை வைத்து சாதனை நிகழ்த்திய வரலாறை மீண்டும் ஒருமுறை அதேபாணியில் பி.வாசு திரும்ப நிகழ்த்துவார் என தாராளமாக நம்பலாம்.