உண்மைதான். ஒரு கட்டத்தில் சினிமாவில் உள்ள அனைவரும் இந்த மாற்றத்தை சந்தித்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது. ஒருசிலர் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். இப்போது நடிகர் விவேக்கும் அப்படி ஒரு மாற்றத்திற்குத்தான் உட்பட்டிருக்கிறார். யெஸ்.. தனது வழக்கமான காமெடி நடிப்பிலிருந்து விலகி முதன்முதலாக சீரியஸான ரோலில் நடிக்க இருக்கிறார் விவேக்.
பாலாவிடம் துணை இயக்குனராக பணியாற்றிய ஆர்.கண்ணன் (ஜெயங்கொண்டான் இயக்குனரல்ல) என்பவர் இயக்கிவரும் ‘நான்தான் பாலா’ என்ற படத்தில் முக்கியமான ரோலில் சீரியஸான கதபாத்திரம் ஏற்றிருக்கிறார் விவேக்.
இந்த மாற்றத்தை இவர் எப்படி எதிர்கொண்டார்? எப்படி ஏற்றுக்கொண்டார்? என்றால் அதற்கு முக்கிய காரணம் இரண்டுபேர் தான். ஒருவர் இயக்குனர் பாலா. தனது சிஷ்யர் கண்ணன் தன்னிடம் இந்தக்கதையை சொன்னதுமே அந்த சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க விவேக் தான் பொருத்தமாக இருப்பார் என கூறினாராம். படத்தின் இயக்குனர் முடிவு செய்து வைத்திருந்த்தும் விவேக்கைத்தான். அதை சரியாக பிரதிபலித்திருக்கிறார் பாலா.
இன்னொருவர் கமல். ஆச்சர்யமே வேண்டாம். கமலே தான். ஒரு நிகழ்ச்சியில் கமலும் விவேக்கும் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது தன்னைத்தேடி வந்திருக்கும் இந்த சீரியஸ் கேரக்டர் பற்றியும் கமலிடம் சொல்லியிருக்கிறார். உடனே கமல் “இந்த வாய்ப்பை விடவேண்டாம். இதுவரை உங்களை காமெடி நடிகராகவே பார்த்திருந்தாலும், புதிய பரிமாணத்தில் ரசிகர்கள் உங்களை நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்கள். இதற்கு பல முன்னுதாரணங்களும் உண்டு” என விவேக்கிற்கு நம்பிக்கை ஊட்டி இருக்கிறார்.
இப்போது முழு மனதுடன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் விவேக். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் விவேக் சினிமாவில் நுழைந்த இந்த 25 வருட காலத்தில் கமலுடன் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. அதேபோல தனது 15வருட திரை வாழ்க்கையில் பாலா தனது ஒரு படத்தில்கூட விவேக்கை நடிக்க வைத்ததில்லை. ஆனால் இவர்கள் இருவரும் விவேக்கின் மீது வைத்திருக்கும் அக்கறையும் அன்பும் அதைத்தாண்டி விவேக்கின் திறமையைப் பற்றிய கணிப்பும் எல்லா சினிமாக்காரர்களிடமும் காணமுடியாதது.
பின்குறிப்பு: பாலாவின் படங்களுக்கு விவேக் காமெடி செட் ஆகாது என்பது நமக்குத் தெரியும். ஆனால் விவேக் மீது இவ்வளவு அக்கறை கொண்டுள்ள கமல், கிட்டத்தட்ட அனைத்து காமெடி நடிகர்களுடனும் நடித்துவிட்ட கமல் விவேக்குடன் மட்டும் இன்னும் நடிக்காமல் இருக்க காரணம் என்ன என்பதுதான் புரியாத புதிர்.