எஸ்.பி.ஜனநாதன் இயற்கை, ஈ, பேரண்மை என மூன்றே படங்கள்தான் இயக்கியுள்ளார். ஆனாலும் மூன்று படங்களுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் தியேட்டருக்கு இழுத்துவந்தன. தனது அடுத்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களை ஒரு ஏக்கத்துடனேயே காத்திருக்க வைத்திருக்கும் எஸ்.பி.ஜனநாதன் பேராண்மை படத்துக்குப்பின் நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்கவில்லை.
ஆனால் அதற்கெல்லாம் சேர்த்துவைத்து இப்போது பிரமாண்ட கூட்டணி அமைத்திருக்கிறார் ஜனநாதன். படத்தின் பெயர் என்ன தெரியுமா? புறம்போக்கு.. ஆர்யா, விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்க, படத்தை தயாரிக்கிறது யூடிவி மோஷன் பிக்சர்ஸ். யூடிவியுடன் எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸும் தயாரிப்பில் இணைகிறது. ‘புறம்போக்கு’ படம் மூலம் எஸ்.பி.ஜனநாதனுடன் இணைவதில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் யூடிவியின் தென்னிந்திய முதன்மை செயல் அலுவலர் ஜி.தனஞ்செயன்.
ஆர்யா, விஜய்சேதுபதி இருவரும் ஏற்றுள்ள பாத்திரங்கள் இதுவரை தமிழ்த்திரை காணாதவை… இந்திய சினிமா உணராதவை… என்கிறார்கள். ஜனநாதன் இயக்கும் படம் என்பதால் அவர்கள் சொல்வதை தாராளமாக நம்பலாம்.
காரணம் தேசிய விருது பெற்ற இயக்குநரான எஸ்.பி.ஜனநாதன் சினிமா என்பதை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதாமல் அதை பழுது நீக்கும் சாதனமாகவும் பயன்படுத்துபவர். சரி.. தன்னுடைய படத்திற்கு புறம்போக்கு என ஏன் பெயர் வைத்தார்..?
“புறம்போக்கு என்பதை இன்று கொச்சையாகப் பேசுகிறார்கள். ஆனால் புறம்போக்கு என்கிற சொல் ஆழமான வாழ்வியலின் அடிப்படையிலான கருத்தை உள்ளடக்கியதாகும். புறம்போக்கு நிலம் என்றால் யாருக்கும் சொந்தமில்லை என்பதல்ல. அது பொதுச்சொத்து என்று பொருள். பொதுசாலை, பேருந்து நிலையம், பள்ளி, மருத்துவமனை கட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டது புறம்போக்கு நிலங்களில்தான். அப்படி மக்கள் தேவைக்காக இருந்த, பொதுஇடமான புறம்போக்கு நிலங்கள் இன்று மெல்ல மெல்ல தனியாரின் ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருகிறது. அதைப் பற்றிய பின்னணியை கொண்ட சிந்தனைதான் இந்தப்படம்” என புறம்போக்கு பற்றி முற்போக்கு கருத்துகளை கூறுகிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்..
யூடிவி மோஷன் பிக்சர்ஸுக்கு திரையுலகில் தனியிடம் உண்டு. இந்திய சினிமாவை உலகப் பார்வைக்கு கொண்டு சேர்க்கிற பணியில் யூடிவி கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது. தற்போது யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் கூட்டணியில் ‘இவன்வேற மாதிரி’, ‘சிகரம்தொடு’ ஆகிய படங்கள் இப்போது தயாரிப்பில் உள்ளன. இதைத் தொடர்ந்து ‘புறம்போக்கு’ படம் அறிவிக்கப் பட்டுள்ளது. உலகப் படங்களில் பணிபுரிந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர். வரும் அக்டோபரில் தொடங்குகிற இப்படம் 2014 ஏப்ரலில் வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.