மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான ‘தடையற தாக்க’ திரைப்படம் அதன் மேக்கிங்கிற்காகவும், திரைக்கதை பாணிக்காகவும் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது. மேலும் அருண்விஜய்க்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தையும் வழங்கியது. இதைத்தொடர்ந்து தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார் மகிழ்திருமேனி. ஆனால் ஹீரோவாக யார் நடிக்க்போகிறார்கள் என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருந்தது.
இப்போது அந்த சஸ்பென்ஸ் உடைந்து விட்டது. ஆம். ஆர்யா தான் அவரது அடுத்த படத்தின் கதாநாயகன். இன்னொரு ட்விஸ்ட் என்னவென்றால் இந்தப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். ’3’ படத்துக்குப்பின் தெலுங்கு, இந்தியில் பிஸியாகிப்போன ஸ்ருதிஹாசன் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வரவிருக்கிறார்.
இந்தப்படம் பற்றி ஸ்ருதியிடம் பேசிய இயக்குனர் மகிழ்திருமேனி, ஆர்யாதான் ஹீரோ என்று சொன்னதும் உடனே சம்மதம் தெரிவித்த ஸ்ருதி கூடவே இன்னொரு நிபந்தனையையும் விதித்தாராம். தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் தான் நடித்துவரும் படங்களின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு வருவதாகவும் அதுவரை காத்திருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
வரும் நவம்பரில் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவுசெய்துள்ள மகிழ்திருமேனி, ஸ்ருதிக்காக காத்திருப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்போது தெரிந்துவிடும். நான் அவன் இல்லை, மாப்பிள்ளை உட்பட பல படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.