ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு பக்கம் ஒன்று கட்டாயம் இருக்கும். ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கும் இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று ஆக்ஷன் முகம், இன்னொன்று ஆன்மீக முகம். ஆக்ஷன் முகம் நமக்குத் தெரியும். ஆனால் ஆன்மீகம்? திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அர்ஜுனுக்குள் உண்மையில் ஒரு ஆன்மீக அர்ஜுன் இருக்கிறார்.
அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் ஆஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2006ஆம் ஆண்டிலிருந்து இந்த கோவில் கட்டும் திருப்பணியை துவக்கிய அர்ஜூன் சிறிதும் சோர்வில்லாமல் தொடர்ந்து வருகிறார்.
இந்தக்கோவிலில் நிறுவுவதற்காக ஏறக்குறைய 35அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலையை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் இருந்து ஒரே கல்லில் சிலையாக வடித்து சென்னைக்கு வரவழைத்து இருக்கிறார்கள். அதற்கான கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள். அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. தஞ்சாவூர் பெரிய கோபுரத்தின் உள்ளிருந்து அபிஷேகம் செய்யும் அதே முறையை பயன்படுத்தி இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அர்ஜுன் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.