‘பட்ட காலிலேயே படும்’ என்பது இசையமைப்பாளர் அனிருத் விஷயத்தில் சரியாகத்தான் இருக்கிறது. சில நாட்களுக்கு முன்புதான் தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவர் அனிருத் மீது தனது படத்திற்கு இசையமைக்க அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சொன்னபடி படத்துக்கு இசையமைத்து தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப்பிரச்சனை முடிவதற்குள்ளாகவே வழக்கறிஞர் ஒருவர் சமீபத்தில் அனிருத் வெளியிட்ட வீடியோ ஆல்பம் தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்தப்புகாரில் அனிருத் சமீபத்தில் வெளியிட்ட ஆல்பத்தில் உள்ள பாடல்வரிகள் பெண்மையை அவமதிக்கும் விதமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அனைத்து மதத்தினரின் மனமும் சங்கடப்படும் விதமாக பாடல் வரிகள் இருக்கின்றன என்றும் எனவே அந்த ஆல்பத்தை தடை செய்யவேண்டும் என்றும் மேலும் அந்த ஆல்பம் சென்சாரின் சான்றிதழ் பெறாமலேயே வெளியாகியுள்ளது சட்டப்படி குற்றம் என்பதால் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளதாம். அனிருத் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.