அதிகாரிகளை அடக்கும் அங்குசம்- ரிலீசுக்கு முன்பே சாதித்தது

62

யானையை அடக்கி பணிய வைக்க பாகன்கள் உபயோகிக்கும் ஆயுதம் தான் அங்குசம். அதேபோல எல்லை மீறும் ஆட்சியாளர்களை, அரசியல்வாதிகளை கிடுக்கிப்பிடி போட்டு அவர்களது தவறுகளை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவும் தகவல் அறியும் சட்டத்தை மையமாக வைத்து அங்குசம் என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் மணுக்கண்ணன் என்பவர். துபாயில் வேலைபார்த்துக் கொண்டிருந்த மனுக்கண்ணன், சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் அரசு இயந்திரங்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருபவரான சீனிவாசன் என்பவரை மையப்படுத்தி கதையை அமைத்திருக்கிறார்.

நிஜக்கதை, அதுவும் தவறு செய்யும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் அச்சுறுத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி அங்குசம் படத்தை எடுக்கிறீர்களே, அதிகாரிகள் மட்டத்திலிருந்து ஏதேனும் பிரச்சினைகள் வந்ததா? என்று கேட்டால் “எந்த ஒரு அரசியல்வாதியையோ அல்லது அதிகாரியையோ நேரிடையாகக் குறிப்பிடாமல் முழுக்க முழுக்க கற்பனையான கதாபாத்திரங்களை உருவாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறோம். இனி படம் வெளியானால்தான் ஏதாவது பிரச்சனைகள வருகின்றதா எனத் தெரியும்” என்கிறார் மணுக்கண்ணன்.

அங்குசம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விழாவாக நடத்திய மணுக்கண்ணன், அதில் சீனிவாசனையும் அழைத்து கெளரவப்படுத்தியுள்ளார். அது வரை தனி நபராகப் போராடிக் கொண்டிருந்த சீனிவாசன் அதிகாரிகளின் அலட்சியம் பற்றி அன்று பேசிய பேச்சு, சம்பந்தப்பட்ட ஆட்சியாளரே அவரை அழைத்து அவரது கவனத்திற்கு வராமல் நடந்த தவறுகளுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்ளும்படி செய்தது. அத்துடன் சீனிவாசனின் கேள்விகளுக்கு உரிய தகவல்களை வழங்கியதுடன் ஊழலுக்குக் காரணமாக இருந்தவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்க உத்திரவாதம் அளித்திருக்கிறார் ஆட்சியாளர். ஒரு படம் இப்படி வெளியாவதற்கு முன்பே சாதித்திருப்பது நல்ல முன் உதாரணம் தான். படத்திற்கு சரியான தலைப்பைத்தான் வைத்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.