நடிகர்கள் : அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன், தேனி முருகன், “கலைமாமணி” சரவணன், ஹரிஷ் குமார், காவ்யா அனில், சச்சின் நாச்சியப்பன், சாச்சனா, R.J. ஆனந்தி, டிம்பிள் கண்ணாம் சித்தார்த்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : ஸ்ரேயாஸ் கிருஷ்ணா
இயக்கம் : மதன்
தயாரிப்பு : செளந்தர்யா ரஜினிகாந்த், மகேஷ் ராஜ் பசிலியன்
மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில், செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியன் தயாரிப்பில் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாக உள்ள ‘வித் லவ்’ காதல் கொண்டாட்டமா ?, அல்லது ரசிகர்களை திண்டாட வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
முதன் முதலில் மனதில் தோன்றும் காதல் உணர்வுகள், காலம் கடந்தாலும் மறக்க முடியாத, எப்போதும் புதுமையாக இருக்கும் நினைவுகளாக நீடிக்கின்றன. அதே சமயம், முதல் காதல் தோல்வி அல்லது காதலை சொல்லாமலே அந்த காலக்கட்டத்தை கடந்த பலருக்கு, அந்த நினைவுகள் வலி மிகுந்த மற்றும் ஏமாற்றம் தரக்கூடியதாக அமைந்து விடுவதுண்டு. அத்தகைய முதல் காதலை தேடி செல்லும், இரு இதயங்களின் காதல் நினைவுகளை சுமந்த பயணமும், அந்த பயணத்தின் மூலம் அவர்களது வாழ்வில் ஏற்பட்ட திருப்பங்களையும், காதலர்களை மட்டும் அல்லாமல், காதலை நினைத்துப் பார்க்காதவர்களையும் அன்பு மழையில் நனைப்பது தான் ‘வித் லவ்’ படத்தின் கதை.
அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜன் திருமணம் செய்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவதோடு, சில நாட்கள் பழகலாம், என்று முடிவு செய்கிறார்கள். அப்போது, சொல்லாமல் போன தங்களது முதல் காதல் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதோடு, அந்த காதல் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை போக்க, காதல் இணையை தேடி கண்டுபிடித்து, தன் மனதில் இருக்கும் காதலை சொன்னால் என்ன ?, என்ற யோசனை தோன்றுகிறது.
அதன்படி, நாயகன் காதலியையும், நாயகியின் காதலனையும் தேடி செல்பவர்கள், அவர்களிடம் காதலை சொன்னார்களா? , அதன் மூலம் இவர்களது பழைய காதல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டதா ? என்பதே படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் அபிஷன் ஜீவிந்த், பக்கத்து வீட்டு பையன் போல் மிக எளிமையாக இருப்பதால், பார்வையாளர்கள் அவரது கதாபாத்திரத்துடன் தங்களையும் தொடர்பு படுத்திக் கொள்வது உறுதி. எந்த ஒரு இடத்திலும் அதீதமான நடிப்பை வெளிபடுத்தாமல், இயல்பாக நடித்திருப்பவர், காதல் தோல்வியால் அழும் காட்சிகளை கூட நகைச்சுவையாக கையாண்டு படம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கிறார்.
தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் அனஸ்வரா ராஜன், முதல் படத்திலே பலம் வாழ்ந்த கதாபாத்திரத்தை மிக கவனமாகவும், சிறப்பாகவும் கையாண்டு பாராட்டு பெற்று விடுகிறார்.
அனிஷா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காவ்யா அனில், சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பார்வையாளர்களின் முதல் காதல் நினைவுகளை கீறி விடும் மாயாஜாலத்தை தன் நடிப்பின் மூலம் நிகழ்த்தியிருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் தேனி முருகன், பள்ளி ஆசிரியராக நடித்திருக்கும் சரவணன், நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன், சித்தார்த், நாயகியின் பள்ளி தோழிகளாக நடித்திருக்கும் டிம்பிள் கண்ணா, சாச்சனா, அக்காவாக நடித்திருக்கும் ஆர்.ஜே.ஆனந்தி ஆகியோரது கதாபாத்திரங்களின் பயணம் சிறியதாக இருந்தாலும், திரைக்கதையில் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரியது.
ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, தனது பணி தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதை தவிர்த்துவிட்டு, படம் பார்ப்பவர்களும் தங்களது பள்ளி வாழ்க்கையின் நினைவுகளோடு பயணிக்க வேண்டும், என்பதில் அதிகம் கவனம் செலுத்தியிருப்பது திரையில் தெரிகிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகங்களாகவும், காதல் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்தும் வகையிலும் அமைந்துள்ளது. பின்னணி இசை காதல் போல் இனிமை.
படத்தொகுப்பாளர் சுரேஷ் குமாரின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்திச் செல்ல பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
முதல் காதல் அனுபவம் என்பது ஆண் – பெண் என்று மாறுபடாது, காதல் என்பது ஒன்று தான், அது இரு பாலித்தவருக்கும் சமமானது, என்ற உன்னதை பறை சாற்றும் விதமாக இயக்குநர் மதன், தான் எடுத்துக் கொண்ட கதைக்கு மிக நேர்த்தியான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
படம் பார்ப்பவர்கள் நிச்சயம் தங்களது முதல் காதலை நினைத்து பார்க்கும் அளவுக்கு காதல் காட்சிகளை உணவுப்பூர்வமாகவும், உண்மைக்கு நெருக்கமாகவும் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் மதன், ஒரு நேர்மையான காதல் படைப்பாக கொடுத்திருக்கிறார்.
இன்றும் கொண்டாடப்படும் காதல் திரைப்படங்களின் வரிசையில் இடம் பிடிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்ட ‘வித் லவ்’ நிச்சயம் தமிழ் ரசிகர்களின் காதல் நினைவுகளை தூண்டிவிட்டு, தியேட்டருக்கு காதல் ஜோடிகளை கொண்டு வந்து குவிக்கும் என்பது உறுதி.
ரேட்டிங் 4/5