“விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்வோம்” ; ரசிகர்களுக்கு சூர்யா தரப்பில் அறிவுரை..!

சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.. அவர்களுக்கு பொது விஷயங்களில், குறிப்பாக தங்கள் கட்சி, ஆட்சி விஷயங்களில் நடிகர்கள் எதுவும் கருத்து சொல்லிவிடக்கூடாது.. அவ்வளவுதான்.. வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடுவார்கள்.. பா.ஜ.க தமிழ்நாட்டு தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் அப்படி ஒருவர்தான்.

சமீபத்தில் அனிதா தற்கொலைக்கு பிறகு, நீட் தேர்வு விவாகரம் தமிழகத்தில் அனைவரிடமும் ஆவேசத்தை கிளப்பிவிட்டுள்ளது. நீட் தேர்வுக்கேதிராக திரையுலகில் உலா பிரபலங்கள் அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள். அந்தவகையில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தனது தந்தையுடன் இணைந்து ‘அகரம்’ பவுண்டேசன் மூலமாக கல்வி சேவை செய்துவரும் நடிகர் சூர்யாவும் நீட் தேர்வு குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் கோபமான தமிழிசை சௌந்தர்ராஜனும் சூர்யாவுக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும் என்கிற விதமாக ஏகடியம் பேசினார். சூர்யா இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் புறந்தள்ளினாலும் ஏற்கனவே நீட் விஷயத்தால் சூடாக இருந்த சூர்யாவின் ரசிகர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது காரசாரமான விமர்சனங்களை சோஷியல் மீடியாவில் வைக்க ஆரம்பித்தனர்.

இருந்தாலும் விமர்சனங்கள் என்பது ஆரோக்கியமாகவே இருக்கவேண்டும் என தனது ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலமாக ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து சூர்யா ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது..,

“சமூக வலைத்தளங்களில் உங்களில் சிலர் தரமற்ற வார்த்தைகளால் மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களை விமர்சிப்பதாக அறிகிறோம். இதனை சூர்யா அண்ணன் அவர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார். கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மையாக எதிர்கொள்வதும் நமது ஆரோக்யமான செயல்பாடுகளால் எதிர்வினையாற்றுவதுமே சூர்யா அண்ணன் நமக்கு கற்றுத்தந்த நற்பண்பு. அதைவிடுத்து இது போன்ற தரமற்ற விமர்சனங்களில் இறங்கும் மன்ற உறுப்பினர்களையும், உறுப்பினராக அல்லாமல் சமூக வலைத்தளங்களில் செயல்படும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். மற்றபடி அந்த கட்டுரையில் இருக்கும் கருத்துக்களிலும் அதன் செயல் வடிவத்துக்கான பணிகளிலும் சூர்யா அண்ணன் எப்போதும் உறுதியாக இருப்பார்.

அண்ணன் சூர்யா பற்றியும் சமூகத்தில் உள்ள கல்வியாளர்களுக்கு நன்கு தெரியும். ‘செயல் அது ஒன்றே மிக உயர்ந்த சொல்’ என்ற தாரக மந்திரத்தில்தான் நம்முடைய நற்பணி இயக்கமானது எப்போதும் செயல் பட்டு கொண்டிருக்கிறது. “விளம்பரத்திற்காக எதையும் செய்யாதீர்கள், உங்கள் மனதார மற்றவர்களுக்கு உதவுங்கள்” என்ற அண்ணன் சூர்யாவின் சொற்படியே கடந்த இருபது வருடங்களாக மன்றமானது செயற்படுகிறது. இனிமேலும் செயற்படும். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதனாலேயே அவரிடம் நம்முடைய உண்மைத் தன்மையை நிரூபிக்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. நம்முடைய செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன் அளித்தால் போதுமானது. எம் தம்பிமார்களின் செயல்கள், மதிப்பிற்குறிய அம்மா மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களை எந்தவிதத்திலாவது காயப்படுத்தி இருந்தால், அதற்கான வருத்தத்தை தெரிவித்து கொள்கின்றோம்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..

அகரம் பவுண்டேசன்சூர்யாசோஷியல் மீடியாதமிழிசை செளந்தரராஜன்நீட்