“ராணுவ வீரனின் காதல் கதை” ; ‘வாகா’ பட இயக்குனரின் மனம் திறந்த பேட்டி..!

விக்ரம் பிரபுவின் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் தான் ‘வாகா’.. காஷ்மீர் ராணுவ பின்னணியில் படமாக்கப்பட்டு இருக்கும் இந்தப்படத்தின் கதையை ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதியுள்ளார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன். ஹரிதாஸ் என்கிற சமூக நோக்கிலான படத்தை இயக்கி பாராட்டு பெற்ற அதே குமரவேலன் தான்..

‘வாகா’ இந்தப்படத்தில் கதாநாயகியாக ரன்யா நடிக்க, இசையமைத்துள்ளார் டி.இமான். ஆக்‌ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள ‘வாகா’ படம் குறித்த செய்திகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் குமாரவேலன்.

‘வாகா’ டைட்டில் வைத்ததற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்குமே..?

படத்தின் இரண்டு விஷயங்களுக்கு இந்த டைட்டில் பொருந்திப்போனது. ஒன்று, இந்திய பாகிஸ்தான் பார்டரில் நடைபெறும் கதை என்பதால் இரு நாடுகளையும் இணைக்கும் பகுதியான ‘வாகா’ என்கிற பெயர் இதற்கு பொருத்தமாக இருந்தது. அதேசமயம் வாசு-காஜல் என்கிற காதல் ஜோடியின் கதையாகவும் இருந்ததால் அவர்களின் பெயர்ச்சுருக்கமாகவும் இந்த டைட்டில் அமைந்துவிட்டது. ஆயினும் வாகா பகுதிக்கும் இந்தக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ராணுவ கதையா..? காதல் கதையா..?

ராணுவ வீரனின் காதல் கதை. ஆக்‌ஷன் ரொமாண்டிக் த்ரில்லராக உருவாகிவரும் ‘வாகா’ படத்தில் துணை ராணுவ அதிகரியாக நடிக்கிறார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபுவுக்காகவே உருவாக்கப்பட்ட கதையா.?

நிச்சயமாக இல்லை.. கதை உருவானபின் அதற்கு விக்ரம் பிரபு பொருத்தமாக இருப்பார் என பட்டது. அவரும் கதை கேட்டுவிட்டு தனக்கு இது புதுமாதிரியான களம் என உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

அவருடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது..?

பெரிய வீட்டுப்பிள்ளை என்கிற பந்தா துளியும் இல்லாதவர்.. இந்தப்படத்தின் ஷூட்டிங் நிறைய நாட்கள் பனி படர்ந்த பிரதேசங்களில் தன படமாக்கப்பட்டது.. நாங்களாவது கோட் சூட் என சமாளித்துக்கொண்டோம்.. ஆனால் அவர் நடிகர் என்பதால், அவருக்கான உடைகளுடன் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நடித்தார். சினிமாவில் இன்னும் பெரிய உயரங்களை தொடுவார்.

ராணுவ வீரரான விக்ரம் பிரபு தாடி வைத்துள்ளாரே..?

பலருக்கும் ராணுவ வீரர் தாடி வைத்திருக்கலாமா என்கிற சந்தேகம் ஏற்படவே செய்யும். இதில் விக்ரம் பிரபு எல்லைப்பாதுகாப்பு படைவீரராக நடிக்கிறார். ராணுவ வீரர்கள்தான் தாடி வைத்துக்கொள்ள கூடாது.. ஆனால் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அவர்களது பணியின் சூழல் காரணமாக தாடி வைத்துக்கொள்ளலாம் என்கிற சலுகை உள்ளது

ஹீரோயின் ரன்யாவை தமிழுக்கு புதிதாக அழைத்து வந்துள்ளீர்கள் போல..?

ஆம்.. சிக்மகளூரை சேர்ந்தவர்.. ஏற்கனவே கன்னடத்தில் சுதீப்புடன் ‘மாணிக்யா’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் ‘வாகா’ படத்தை பொறுத்தவரை பல கட்ட சோதனைகளுக்கு பிறகே கதாநாயகி வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. இந்தப்படத்தில் காஷ்மீரில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணாக நடித்திருக்கிறார்.

இமானுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி..?

என்னுடைய முந்தைய மூன்று படங்களிலும் விஜய் ஆண்டனி தான் இசையமைத்தார். அவர்தான் இப்போது பிசியான ஹீரோவாகிவிட்டாரே.. அவரை தவிர்த்து பார்த்தால் இமானுடன் இணைந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இருந்தது.. இந்தப்படத்துக்கும் இமான் இசையமைத்தால் ப்ளஸ்ஸாக இருக்கும் என்றும் தோன்றியது.. அற்புதமான பாடல்களை தந்துள்ளார்.

பாடல்கள் பற்றி..?

மெலடிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ என்கிற அருண்ராஜா காமராஜ் எழுதிய பாட்டு சூப்பர்ஹிட்டாகும். அவர் ‘கபாலி’க்கு எழுதிய ‘நெருப்புடா’ பாடலுக்கு முன்பே எங்களுக்கு எழுதிய பாடல் இது. குத்துப்பாட்டு மாதிரி இருந்தாலும் படத்தில் சிச்சுவேசனுக்கு தகுந்தமாதிரி கேரக்டரை வெளிப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும். இன்னொரு சிறப்பு இந்தப்படத்தில் முதன்முறையாக விக்ரம் பிரபுவை பாடவைத்துள்ளோம்.. இல்லையில்லை ஒரு பாடலில் பேசவைத்துள்ளோம் என்று சொல்வதுதான் சரி.

ராணுவ கதை என்பதால் காமெடியை எதிர்பார்க்கலாமா..?

கருணாஸ், சத்யன் என இரண்டுபேர் இருந்தாலும் கூட அவர்கள் கேரக்டர் ரோல் தான் பண்ணியிருக்கிறார்கள்.. இடைவேளை வரை கதையை நகர்த்தி செல்வது கூட அவர்கள் தான். தேவையான அளவு காமெடி இருக்கும்.

எல்லையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி எளிதாக கிடைத்துவிட்டதா..?

படப்பிடிப்புக்கு அனுமதி பெறுவதை பல போராட்டங்களுக்கு பிறகு தான் சாத்தியமாக்கினோம். கடுங்குளிர், கடும் வெயில் என எல்லாவித வெப்பநிலையிலும் வேலை பார்த்தோம். படப்பிடிப்பு குழுவினரின் பாதுகாப்புக்கு எப்போதும் ராணுவ வீரர்கள் சுற்றி நின்றபடி இருந்தார்கள். அதனால் படப்பிடிப்பு நடத்துவதில் பெரிய அளவு சிரமங்கள் குறைந்தன. இந்தப்படத்தின் கதைக்காக எங்களுக்கு தேவைப்பட்ட சில விபரங்களை வீரப்பன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜயகுமார் சார் கொடுத்தார். அவரும் ஒருகாலத்தில் எல்லை பாதுகாப்பு படைவீரராக இருந்தவர் தானே..”

என நம்மிடம் விலாவாரியாக படத்தகவல்களை பகிர்ந்துகொண்ட இயக்குனர் ஜி.என்.ஆர்.குமாரவேலன் ‘ஹரிதாஸ்’ படம் போல இந்தப்படமும் ஒரு புதுவித அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் என்கிறார்.. ‘வாகா’ படம் வரும் ஆகஸ்ட்-12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

D ImmanKumaravelanRanyaVikram PrabhuWagah