“நான் தேர்தலில் நிற்க கூடாது என நினைத்தவர்களில் இரும்புத்திரை இயக்குனரும் ஒருவர்” ; விஷால்

விஷால் தற்போது இரும்புத்திரை படத்தில் நடித்து வருகிறார். பி.எஸ்.மித்ரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் வரும் ஜன-26ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக உள்ளது. நேற்று இந்தப்படத்தின் டீசரை வெளியிட்டார்கள். இந்த நிகழ்வில் விஷால், நாயகி சமந்தா, காலி வெங்கட், ரோபோ சங்கர், ஆர்.வி.உதயகுமார். எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய விஷால், “இரும்புத்திரை படம் காலதாமதம் ஆனது என்னால் தான். இந்தப்படத்தை ஆரம்பித்த நிலையில் தான் நான் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நிற்கவேண்டி இருந்தது. அதனால் இந்தப்படத்தில் முடங்கிய பணத்திற்கு வட்டி கட்டினாலும் பரவாயில்லை, சங்கத்தை நல்ல நிலைக்கு கொண்டுவர தேர்தலை சந்தித்தே ஆகவேண்டும் என படப்பிடிப்பை தள்ளிவைத்து சங்க தேர்தலில் போட்டியிட்டேன்.

அதன்பின் படப்பிடிப்பு நடந்தவந்த வேளையில் ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்க முடிவெடுத்தது மற்ற யாரையும் விட இந்தப்படத்தின் இயக்குனர் மித்ரனுக்குத்தான் அதிரச்சியாக இருந்திருக்கும். அந்த தேர்தல் வேளைகளில் நான் இறங்கிவிட்டால் ஏற்கனவே இந்த ஏப்ரலில் ரிலீஸுக்கு திட்டமிட்டிருந்த இந்தப்படம் இன்னும் தள்ளிப்போய் அடுத்த ஏப்ரலுக்குத்தான் வெளியாகும் என பயந்தார்.

அதனால் என் வேட்புமனு தள்ளுபடியாக வேண்டும் என சாமியை கும்பிட்டவர்களில் எனது மனு தள்ளுபடியானபோது சந்தோஷப்பட்டவர்களில் இயக்குனர் மித்ரனும் ஒருவராக இருந்திருப்பார்.. காரணம் இந்தப்படத்தில் அவர் தனது மொத்த உழைப்பையும் கொட்டியுள்ளார்” என இயக்குனர் மித்ரனை புகழ்ந்து பேசினார் விஷால்..

Irumbu ThiraiMithranSamanthaVishalஇரும்புதிரைசமந்தாமித்ரன்விஷால்