மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நடிகர்சங்க தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் விஷாலின் தலைமையிலான அணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத்தை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றார். அவர் 143 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். விஷால் 476 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 332 வாக்குகள், கேயார் 224 வாக்குகள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு..
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பாக துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ் வெற்றி பெற்றனர் விஷால் அணி சார்பாக செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா வெற்றி பெற்றார். ஆனால் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மற்றொரு வேட்பாளர் மிஷ்கின் தோல்வியடைந்தார். விஷால் அணி சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.ஆர். பிரபு வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த விஷால், “’எனக்கு வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி. மாற்றம் வர வேண்டும் என்றால், அதை யாராலும் தடுக்க முடியாது. இரண்டு ஆண்டுகளில், தயாரிப்பாளர் சங்கம் வரலாறு காணாத முன்னேற்றம் அடையும். விவசாயிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். குற்றசாட்டுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன். திருட்டு வி.சி.டி எதிரிகள் தயாராக இருங்கள்” என்று கூறினார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய மாற்றம் வேண்டும் என்பதையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்பதை இந்த வெற்றி உணர்த்துகிறது.