கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விஷாலின் தலையும் உருண்டது.. அவர் பீட்டாவை சேர்ந்தவர் என்று செய்தி பரவியது… இலையென மறுத்து விளக்கம் அளித்தார்.. ஒருபடி மேலாக பிரதமர் மோடியையே சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்த ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்வதாக கூறி டெல்லிக்கே கிளம்பி போனார்..
ஒருவழியாக இப்போது போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது சரியான செயல் என அவர் சொன்னதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவ ஆரம்பித்தது.. தனக்கு எதிரான ஒரு குரூப் தான் இதுபோன்ற வேலைகளை செய்து வருகிறார்கள் என விஷால் வாட்ஸ் அப் வீடியோ மூலமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, “மீண்டும் என்னைப்பற்றி தவறாக ஒரு செய்தியை பரப்பி வருகிறார்கள், நான் அந்த மாதிரி எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. ஒரு உணர்வுப்பூர்வமான போராட்டத்தை மாணவர்கள் நடத்தி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு விஷயத்தில் நல்லது நடக்கும் என்று சொல்லியிருந்தேன், அதன்படி அவசரசட்டமும் வந்துள்ளது, ஜல்லிக்கட்டும் நடைபெற இருக்கிறது.
இந்த சமயத்தில் விஷால் அப்படி சொன்னார், விஷால் இப்படி சொன்னார் என்று தவறான செய்தியை பரப்பி வருகிறார்கள். இது வருத்தமளிக்கிறது. திரும்ப திரும்ப நான் சொல்ல சொல்ல என்று என்னை விளக்கமளிக்க வைக்கும் அந்த நபர்களுக்கு சொல்கிறேன், என்னை பழிவாங்க இது நேரமில்லை. என்று மிகவும் தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்” என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்..