‘பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்” ; ஹெச்.ராஜாவுக்கு விஷால் கண்டனம்..!

திருட்டு விசிடிக்கு எதிராகவும், ஆன்லைன் பைரசிக்கு எதிராகவும் தொடர்ந்து எதிர்ப்புக்குரல் கொடுத்து வருகிறார் விஷால். அவர் நடிகர்சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் ஆன பின்பு இதில் இன்னும் வேகம் காட்டி வருகிறார். அப்படிப்பட்ட விஷால், மத்தியில் ஆளும் கட்சியை சேர்ந்த தமிழகத்தில் உள்ள முக்கிய புள்ளியான ஹெச்.ராஜா என்பவர் திருட்டுத்தனமாக மெர்சல் படத்தை பார்த்ததாக ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டால் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா..?

இதுகுறித்து ஹெச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஷால்.

“ஒரு தேசியக்கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

ஹெச்.ராஜா அவர்களுக்கு… மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என் கூறியுள்ளார்.

இந்தநிலையில், “மத்திய அரசு குறித்து தவறான தகவல்கள் `மெர்சல்’ திரைப்படத்தில் வந்துள்ளதாக எனக்கு போனில் கூறப்பட்டது. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி வரும் காட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வந்துவிட்டன. அது எனக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதைத்தான் நான் பார்த்தேன்” என திடீர் பல்டி அடித்துள்ளார் ஹெச்.ராஜா.

H RajaMersalVishalமெர்சல்விஷால்ஹச் ராஜா