நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்று சினிமாவில் புதுமுகங்கள் நுழைந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.. ஆனால் நமது முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அவர்களின் கையால் சிறந்த பஞ்சாயத்து தலைவர் என விருது வாங்கிய செந்தில் முருகன் என்பவர், சினிமா தான், அதிலும் நடிப்புதான் தன் கனவு என ‘விருத்தாசலம்’ என்கிற படம் மூலமாக சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார்.
தான் இயக்கும் படம் மூலம் இவரை சினிமாவுக்குள் ஹீரோவாக மட்டும் இல்லாமல் படத்தின் தயாரிப்பாளராகவும் சேர்த்து அழைத்து வந்திருக்கிறார் இயக்குனர் ரத்தன் கணபதி. இவர் ‘தாலாட்டு’, ‘அரசு தர்பார்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி, இருபது வருட சினிமா அனுபவம் வாய்ந்தவர். படத்தின் கதாநாயகியாக கிராமத்து டீச்சராக ஸ்வேதா என்பவர் நடிக்கிறார்.
கிராமத்தின் பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும், தொழில் ரீதியாக செந்தில் முருகன் ஒரு சிவில் காண்ட்ராக்டர். சுயேச்சையாக நின்று இரண்டு முறை பஞ்சாயத்து தலைவரானவர். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் அவரிடம் சொன்னபோது, கதை பிடித்துப்போய் ஆடியன்ஸின் பல்ஸ் பார்க்கவேண்டும் என்பதற்காக தன்னிடம் வேலைபார்க்கும் கொத்தனார், மேஸ்திரி, சித்தாள் உட்பட பலரை உட்காரவைத்து கதை சொல்லச்சொன்னாராம்.. அவர்களுக்கும் பிடித்ததால் தான் உடனே நடிகனாகவும் தயாரிப்பாளராகவும் படத்தை ஆரம்பித்தாராம்.
பின்குறிப்பு : படத்தில் ஹீரோவின் பெயர் விருதகிரி. படத்தின் பெயரோ விருத்தாசலம்.. மற்றதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.. அவ்வளவுதான்..