விஜய்சேதுபதியை அழ வைத்த ஆவணப்படம்!

பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் விரிவாக பேசியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்படம் முதலில் திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள் பார்வைக்கு திரையிடப்பட்டது.

மூத்த இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர்கள் என்.லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி, ராஜு முருகன், நடிகர்கள் விஜய்சேதுபதி, ஜிவி பிரகாஷ் உட்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.. 50 நிமிடங்கள் ஓடிய கொலை விளையும் நிலம் ஆவணப்படம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்தது.

இந்தப்படத்தை பார்த்துவிட்டு பேசிய விஜய்சேதுபதி ‘என்னை கண்கலங்க வைத்த ராஜீவ்காந்திக்கு மரியாதை கலந்த வணக்கம். இந்த ஆவணப்படம் என்னை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்கே என்னை அழைத்து சென்று உட்கார வைத்தது. அழுதுவிட்டேன். நாம் போராடும் முறைகளிலும் புதிய மாற்றங்கள் வேண்டும். ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் நிலைமை மாறவில்லை.

போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் இந்த போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதை பற்றியும் வேறு போராட்ட வழிமுறைகளையும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

மரணம் பிறர் வீட்டு கதவை தட்டும்போது கண்டுகொள்ளாமல் தான் இருப்பார்கள். ஆனால் அது நம் வீட்டுக் கதவை தட்டும்போது தான் அய்யோ அம்மா என்று அடித்துக்கொண்டு அலறுவார்கள். அதுவரை காத்திருக்காமல் இந்த ஆவணப்படம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

KolaiVilaiyumNilamRajiv GandhiVijaysethupathiகொலை விளையும் நிலம்விஜய் சேதுபதி