ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரை உலகிலேயே அரிதான நிகழ்வாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரே குடும்படத்தை சேர்ந்த நாகேஸ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, அவரது மகன் நாகசைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்கள் மனம் என்கிற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்து சாதனை படைத்தனர்.
அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து படத்தில் ஒரே நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப்படத்தை நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தை இயக்குனர் சரவ் சண்முகம் இயக்கி வருகிறார்.
இந்தப்படம் குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம் கூறும்போது, “இந்தப்படத்தில் அருண் விஜய் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக நடிக்கிறார். ஆனால் அருண்விஜய்யின் தந்தையும் மூத்த நடிகருமான விஜயகுமார் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதிலும் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது” என கூறியுள்ளார்.
அதேசமயம், “அருண்விஜய் போல விஜயகுமாருக்கு கதை சொல்வது அத்தனை எளிதாக இல்லை. அவரது கதாபாத்திரம் குறித்தும் படத்தில் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு விளக்கினேன். இது குடும்ப படம் என்பதாலும் உணர்வுபூர்வமான நிறைய சம்பவங்கள் அவரது கதாபாத்திரத்தை சுற்றி நடப்பதாலும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்” என்றும் கூறுகிறார் இயக்குனர் சரவ் சண்முகம்.
குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இந்தப்படம் அருண்விஜய்யின் 32 வது படமாகும். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது.