சீனியர்களுக்கு விஜய்சேதுபதி அளிக்கும் 100 சவரன் கெளரவம்..!

தமிழ் சினிமாவின் முதல் சலனப்படம் வெளியாகி நூறாண்டுகள் கழிந்துவிட்டன.. இந்த நூறு வருடங்களில் சினிமாவுக்காக உழைத்த ஒவ்வொரு துறையை சேர்ந்த மூத்த கலைஞர்களுக்கும் கௌரவிக்கும் விதமான ஏற்பாட்டை தனது உலகாயுதா பவுண்டேஷன் மூலம் முன்னெடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்..

அதன்படி தமிழ்சினிமாவில் இப்போதுள்ள 33 துறைகளை சேர்ந்த சீனியர்களில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களில் 100 பேருக்கு தலா ஒரு சவரன் வீதம் வழங்கி அவர்களை கௌரவிக்க முடிவு செய்திருந்தார் எஸ்.பி.ஜனநாதன்..

இந்த விஷயம் பற்றி கேள்விப்பட்ட விஜய்சேதுபதி, ஜனநாதனை தொடர்புகொண்டு, அந்த 100 சவரன் நகையையும் தானே வழங்குவதாக முன்வந்துள்ளார்.. வெறும் பேச்சோடு நிற்காமல், 100 சவரன் காசுகளையும் முன்கூட்டியே வாங்கி கையிருப்பாக வைத்துவிட்டு, வரும் மே-1ஆம் தேதி இவற்றை பயனாளிகளுக்கு வழங்கும் விழாவை காமராஜர் அரங்கத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளிலும் ஜனநாதனுடன் ஈடுபட்டுள்ளார் விஜய்சேதுபதி.

இதுபற்றி விஜய்சேதுபதி கூறும்போது, “சினிமா தான் எனக்க எல்லாமும் தந்தது.. சினிமாவில் சாதாரண நிலையில் இருந்த காலத்தில் இருந்து இப்போதுவரை ஒவ்வொரு துறை கலைஞர்களின் உழைப்பை பார்த்து வருகிறேன்.. இவர்கள் மூலமாக சீனியர் கலைஞர்களின் உழைப்பை பற்றி கேட்டும் அறிந்துள்ளேன்.. அப்படிப்பட்டவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் எனது பங்கும் இருக்கவேண்டும் என்றுதான் ஜனநாதன் சாருடன் இணைந்துள்ளேன்.. நான் ஒன்றும் பெரிதாக அள்ளி கொடுக்கவில்லை.. மக்கள் எனக்கு தந்ததில் ஒரு சிறு பகுதியை வைத்து இந்த கலைஞர்களுக்கு மரியாதை செய்ய நினைத்தேன்.. அவ்வளவுதான்.. இனி மற்றவர்களும் மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக இது போன்ற செயல்களில் எடுபட இது ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என கூறியுள்ளார் விஜய்சேதுபதி.

S P JananathanVijay Sethupathiஎஸ் பி ஜனனாதன்விஜய் சேதுபதி