ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் ‘விடுதலை 1 & 2’!

எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக ‘விடுதலை 1’ வெளியானதில் இருந்து உலகளவில் பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இப்போது, இது அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. ‘விடுதலை- பார்ட் 1’ மற்றும் ‘விடுதலை- பார்ட் 2’ ஆகிய இரண்டும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 3 ஆம் தேதிகளில் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் ‘லைம்லைட் (LIMELIGHT)’ பிரிவின் கீழ் திரையிடப்பட இருக்கிறது என்பதை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், நடிகர் விஜய்சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பகிர்ந்து கொண்டதாவது, “ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழா போன்ற உலகின் மிகவும் மதிப்புமிக்க நிகழ்வுகளில் ’விடுதலை’ படம் மூலம் நமது இந்தியத் திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துவது எங்களுக்கு பெருமையும் மரியாதையும் ஆகும். நன்மதிப்பு பெற்ற ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் தங்களது படத்தையும் திரையிட வேண்டும் என்பது சினிமாவில் பலருடைய கனவு. இந்த வாய்ப்பு இப்போது எங்களுக்கு கிடைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது எங்களுக்குக் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். பல நம்பிக்கையூட்டும் கதைகள் தமிழ் சினிமாவில் வெளிவந்து வெற்றிப் பெற்றுள்ளது. இது சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இந்த வரிசையில் ‘விடுதலை பார்ட் 1 & பார்ட் 2’ திரைப்படமும் இணைந்திருப்பது எங்களுக்கு எல்லையில்லாத மகிழ்சியைக் கொடுக்கிறது. இந்தப் படத்தில் இயக்குநர் வெற்றிமாறனின் மிடாஸ்-டச் மொழி, பிராந்தியம் போன்ற தடைகளைத் தாண்டி, உலகளவில் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. விஜய்சேதுபதி, சூரி மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரின் நிபந்தனையற்ற கடின உழைப்புக்கும் ஆதரவிற்கும் நன்றி” என்றார்.

கடந்த மார்ச் 31, 2023 அன்று வெளியான ’விடுதலை- பார்ட்1’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டைப் பெற்றது. நடிகர்களின் திறமையான நடிப்பு, இசைஞானி இளையராஜாவின் மாயாஜால இசை மற்றும் சிறந்த தொழில்நுட்பப் பணிகள் என இந்தப் படத்தில் அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது. இந்த வருடம் 2024, கோடை விடுமுறையில் ’விடுதலை- பார்ட் 2’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

Kollywood NewsRotterdam international film festivalSuriVetrimaranviduthalai movie screening rotterdam film festivalVijay Sethupathi