’வங்காள விரிகுடா’ விமர்சனம்

நடிகர்கள் : குகன் சக்கரவர்த்தி, பொன்னம்பலம், வாசு விக்ரம்
இசை : குகன் சக்கரவர்த்தி
ஒளிப்பதிவு : குகன் சக்கரவர்த்தி
இயக்கம் : குகன் சக்கரவர்த்தி
தயாரிப்பு : குகன் சக்கரவர்த்தி

தூத்துக்குடி மாவட்டத்தின் மக்கள் செல்வாக்கு மிக்க தொழிலதிபரான நாயகன் குகன் சக்கரவர்த்தி, இன்பம் இல்லாத இல்லற வாழ்க்கையினால் மனம் உடைந்து கடற்கரையில் தனிமையில் இருக்கும் போது, அவரது முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரை காப்பாற்றுகிறார். முன்னாள் காதலியின் திருமண வாழ்க்கையும் தன்னைப் போலவே இருப்பதை அறிந்துக் கொள்ளும் குகன் சக்கரவர்த்தி, அவர் வாழ்க்கையின் மறுசீரமைப்புக்காக ஒரு கொலை செய்வதோடு, அவருடன் வாழவும் தொடங்குகிறார்.

இதற்கிடையே குகன் சக்கரவர்த்தியால் கொலை செய்யப்பட்டவர், அவரது காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். இறந்தவர் எப்படி பேச முடியும், என்ற குழப்பத்தில் இருக்கும் போது, தனிமையில் இருக்கும் அவரது காதலியை அச்சப்பட வைக்கும் சில சம்பவங்கள் நடக்கிறது. இதனால், மேலும் குழப்பமடையும் குகன் சக்கரவர்த்தி, தன் காதலியையும், தன்னையும் மிரட்ட முயற்சிக்கும் நபர் யார் ? என்பதை அறியும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் என்ன நடக்கிறது, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்து படத்தை இயக்கவும் செய்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, ரஜினிகாந்த் பாணியில், வெள்ளை விஜயகாந்தாக திரை முழுவதையும் தன்வசப்படுத்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார். தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தட்டி கேட்கும் அதிரடி, மனைவியிடம் காதல், முன்னாள் காதலி மீது அக்கறை, அனைவருக்கும் மரியாதை கொடுக்கும் அமைதியான குணம், ஏழை மக்களுக்கு உதவும் கொடை பண்பு, என்று தமிழ் சினிமாவின் அத்தனை ஹீரோக்களையும் தன் ஒற்றை உருவத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனின் மனைவி மற்றும் முன்னாள் காதலி என்று இரண்டு கதாநாயகிகளும், கமர்ஷியல் நாயகிகளாக பாடல்கள் மற்றும் காதல் காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தாமல், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாகவும் பயணித்திருக்கிறார்கள்.

பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஏராளமான புதுமுகங்கள், தங்களுக்கு என்ன வேலை என்றே தெரியாமல் அவ்வபோது தலைகாட்டி செல்கிறார்கள்.

திராவிட தலைவர்களையும், தமிழ் சினிமா நாயகர்களை மையமாக வைத்து எழுதியிருக்கும் பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவு ஓகே தான்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்றி தனி ஒரு நபராக இப்படத்தை தோளில் சுமந்திருக்கும் குகன் சக்கரவர்த்தி, சினிமா ஆசையின் காரணமாக மேற்கொண்டுள்ள புதிய முயற்சி வியக்க வைக்கிறது.

இளைஞர்களுக்கான மாஸ் ஆக்‌ஷன், பெண்களுக்கான குடும்ப டிராமா, அனைத்து தரப்பினருக்குமான சஸ்பென்ஸ் திரில்லர் என பல ஜானர்களில் பயணிக்கும் திரைக்கதை, எதிர்பார்க்காத சில திருப்பங்கள் என்று நிமிடத்துக்கு நிமிடம் பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தும் இந்த ‘வங்காள விரிகுடா’ கடல் அலைகள் போல் ஆர்ப்பரிக்கிறது.

ரேட்டிங் 2.8/5

tamil movie gangala viriguda reviewvangala viriguda movie reviewvangala viriguda reviewவங்காள விரிகுடா சினிமா விமர்சனம்வங்காள விரிகுடா திரைப்பட விமர்சனம்வங்காள விரிகுடா விமர்சனம்