ஜான்சி ராணி தோன்றுவதற்கு, ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்பே அதாவது பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி நம் வீரமங்கை வேலுநாச்சியார். உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் வழக்கமுள்ள ஒரு காலகட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரை கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்று சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி தான் வீரமங்கை வேலுநாச்சியார்.
தற்போது இவரது வரலாற்றை இன்றைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக ‘வேலுநாச்சியார்’ என்கிற படம் தயாராக இருக்கிறது.. ஆச்சர்யமாக அரசியலில் பரபரப்பாக இயங்கிவரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தப்படத்தை தயாரிப்பதன் மூலம் திரைத்துறையிலும் காலடி எடுத்து வைக்கிறார்.
வேலுநாச்சியார் மேடை நாடகம் பலஇடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வேலுநாச்சியார் மேடை நாடகத்தை மிகபிரம்மாண்டமாக கண்ணகி பிலிம்ஸ் சார்பில் வைகோ திரைப்படமாக தயாரிக்கவுள்ளார். வேலுநாச்சியாராக மணிமேகலை சர்மா என்பவர் நடிக்கிறார்.