நடிகர்கள் : கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத், நிழல்கள் ரவி, ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பாபி சிம்ஹா, வித்யா
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்
இயக்கம் : நலன் குமாரசாமி
தயாரிப்பு : ஸ்டுடியோ கிரீன் – கே.ஈ.ஞானவேல்ராஜா
தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான ராஜ்கிரண், எம்.ஜி.ஆர் காலமான தினத்தில், அவரது அம்சத்தோடு பிறக்கும் தனது பேரன் கார்த்தியை, அவரைப் போலவே வளர்க்கிறார். ஆனால், கார்த்தி உடலால் எம்.ஜி.ஆர் ஆக இருந்தாலும், உள்ளத்தில் நம்பியார் குணம் கொண்டவராக வளர்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராகும் கார்த்தி, எதை எல்லாம் செய்யக்கூடாதோ அவை அனைத்தையும் செய்வதோடு, மிகப்பெரிய கார்ப்பரேட் மற்றும் அரசியல் இடைத்தரகரான சத்யராஜுடன் இணைந்து மக்களுக்காக போராடுபவர்களை அழிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்.
எம்.ஜி.ஆர் அம்சம் கொண்ட கார்த்தி, அவரது வழியில் பயணிக்காமல் எதிர்மறையாக பயணிப்பது ராஜ்கிரணுக்கு தெரிந்ததும், மனம் வருந்தி இறந்து விடுகிறார். தாத்தாவின் இறப்பினால் மனதளவில் பாதிக்கப்படும் கார்த்தியின் உடலில் திடீரென்று ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது ?, என்பதை ஃபேண்டஸியாகவும், கலகலப்பாகவும் சொல்வதே ‘வா வாத்தியார்’.
ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றும் சூப்பர் மேன்கள் கற்பனை உருவங்களாக இருக்கும் நிலையில், மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கும் மறைந்த நடிகர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்-யையே ஒரு சூப்பர் ஹீரோவாக சித்தரித்திருக்கும் இயக்குநர் நலன் குமாரசாமி, அதை ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை பாணியில் சொன்னாலும், தமிழகத்தில் நடந்த கசப்பான சம்பவத்தை திரைக்கதையின் முக்கிய அம்சமாக சொல்லி கவனம் ஈர்த்து விடுகிறார்.
காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தை மிக சாதாரணமாக கையாண்டு ரசிக்க வைக்கும் கார்த்தி, இரண்டாம் பாதியில் ஏற்றுக்கொண்டிருக்கும் வேடம் சவாலானது என்றாலும், அதை மிக சிறப்பாக செய்து பார்வையாளர்களிடம் பாராட்டு பெறுகிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு கார்த்தியின் உடல் மொழி மற்றும் நடிப்பு எம்.ஜி.ஆர்-ஐ மீண்டும் பார்த்த உணர்வை கொடுக்கும்.
நாயகியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டிக்கு திரைக்கதையோடு பயணிக்கும் கதாபாத்திரமாக இருந்தாலும், நடிப்பை விடவும், அழகு மற்றும் நடனம் மூலமாக மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.
எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்திருக்கும் ராஜ்கிரண், வழக்கம் போல் தனது அழுத்தமான நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்.
வில்லனாக நடித்திருக்கும் சத்யராஜ், மீண்டும் தனது தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்தி, புதிய சத்யராஜை பார்க்க வைத்திருக்கிறார்.
ஷில்பா மஞ்சுநாத், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், கருணாகரன், பி.எல்.தேனப்பன், யார் கண்ணன் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் பாபி சிம்மா என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். ஹீரோவுக்கான மாஸ் காட்சிகள் மட்டும் இன்றி, படத்தில் இடம் பெறும் அனைத்து காட்சிகளையும் தனது கோணங்கள் மற்றும் வண்ணங்கள் மூலம் மாஸாக காட்சிப்படுத்தியிருப்பவர், சண்டைக்காட்சிகளை கூட பல வண்ணங்களை பயன்படுத்தி ரசிக்கும்படி காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார். குறிப்பாக இரவு நேர காட்சிகளில் பயன்படுத்தியிருக்கும் விளக்குகள் மற்றும் வண்ணங்கள் கவனம் ஈர்க்கிறது.
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் முனுமுனுக்க வைப்பதோடு, பின்னணி இசை ஒரு கதாபாத்திரமாக பயணித்து திரைக்கதையின் பலவீனத்தை பல இடங்களில் மறைத்து பலம் சேர்த்திருக்கிறது.
வெற்றி கிருஷ்ணனின் படத்தொகுப்பு குழப்பம் இல்லாமல் படத்தை நகர்த்தி செல்வதோடு, அரசியல் பின்னணி கொண்ட கதையை ஃபேண்டஸி பாணியில் சொல்லும் இயக்குநரின் சிந்தனைக்கு ஏற்ப காட்சிகளை தொகுத்து படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் படத்தை பயணிக்க வைத்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் நலன் குமாரசாமி, கதைக்களம் மட்டும் இன்றி கதாபாத்திரங்களின் வடிவமைப்பையும் மிக வித்தியாசமாக கையாண்டு ரசிகர்களை கவர்ந்து விடுவார். அதுபோலவே இதிலும், கார்த்தியின் கதாபாத்திரத்தை வித்தியாசமாக கையாண்டு அவரது ரசிகர்களை மட்டும் இன்றி எம்.ஜி.ஆர்-ன் ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறார்.
முதல் பாதி முழுவதும் கார்த்தியின் அலட்டல் இல்லாத நடிப்பால் படம் கலகலப்பாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அரசியல் அம்சத்தோடு பயணிக்கும் திரைக்கதையில் எம்.ஜி.ஆர் அம்சம் என்னவெல்லாம் செய்கிறது, என்பதை கமர்ஷியலாக சொன்னாலும், அழுத்தமான அரசியலையும் அலட்டிக்கொள்ளாமல் பேசியிருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி.
நலன் குமாரசாமியின் புதிய சிந்தனைக்கு, உயிரூட்டும் வகையில் நடித்திருக்கும் கார்த்தியின் இந்த ‘வா வாத்தியார்’ பொங்கல் கொண்டாட்டத்திற்கு ஏற்ற சர்க்கரை பொங்கலாக தித்திக்கிறது.
ரேட்டிங் 4/5