“போராட்டங்களை திசைதிருப்புகிறது சென்சார் போர்டு” ; இயக்குனர் மீரா கதிரவன் பகீர் குற்றச்சாட்டு..!

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ், தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்து ‘தவிச்ச வாய்க்கு தண்ணி’ பாடல் ஒன்றை. உயிர்கொடு காவிரி’ என்கிற வீடியோ ஆல்பமாக. இந்திராஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன் ஆதரவுடன் தயாரித்து இயக்கியுள்ளார். சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குனர்கள் வ.கௌதமன், மீரா கதிரவன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இந்திரா புராஜெக்ட்ஸ் நிறுவனர் பூபேஷ் நாகராஜன், நடிகர்கள் அரீஷ்குமார், அபிசரவணன், மைம் கோபி, இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான பி.ஜி.முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் சமூக ஆர்வலர்களான சபரிமாலா, கம்பம் குணாஜி, விவசாயிகள் தரப்பிலிருந்து ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணை விவசாயி செல்வமணி உள்ளிட்ட சில விவசாயிகளும் கலந்துகொண்டனர்.

இந்த ஆல்பத்தை இயக்கியுள்ள இயக்குனர் ராகேஷ் பேசும்போது, “தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் பயணிக்கும்போது ஒருகாலத்தில் அங்கே பசுமையாக இருந்த நிலங்கள் இன்று வறண்டுபோய் கிடப்பதை பார்க்கும்போது, அந்தப்பகுதியில் பிறந்து வளர்ந்தவன் என்கிற முறையில் ரொம்பவும் வருத்தப்பட்டேன். இப்போதும் கூட அங்கே மண் அள்ளிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஹெலிகேம் வைத்து படமாக்கும்போது அதை கல்லெறிந்து உடைத்தார்கள், ஸ்லீப்பர் செல்போல அந்தப்பகுதியில் சிலர் இருக்கிறார்கள். இதை யாருக்காக செய்கிறோம் என அவர்களுக்கு தெரியவில்லை.. ஆனால் தாங்கள் செய்வது தப்பு என அவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. காவிரிக்கும் கிரிக்கெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. காவிரியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அது கிரிக்கெட் விளையாடும் மைதானமாக மாறிவிட்டது, விவசாயிகளின் வலி, வேதனையை இந்த ஆல்பத்தில் பதிவு செய்துள்ளோம்” என்றார்.

இயக்குனர் மீரா கதிரவன் பேசும்போது, “மூன்று படங்களை இயக்கிவிட்ட ராகேஷ் நினைத்திருந்தால், எங்கேயாவது இருட்டு அறையில் முரட்டு குத்து குத்தி ஒரு படத்தை எடுத்து காசு பார்க்க கிளம்பியிருக்கலாம். ஆனால் அவர் காவிரி நீரை பற்றி படம் எடுக்க முன்வந்ததற்காக அவருக்கு தலைவணங்குகிறேன்.. ஜல்லிக்கட்டு, காவிரி, நீட் தேர்வு என ஒருபக்கம் இளைஞர்கள் போராட, இன்னொரு பக்கம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தை கொண்டாடுவதும் நம் இளைஞர்கள் தான், இங்கே உளவியல் ரீதியான சிக்கல் இருக்கிறது. அதை சரிசெய்யவேண்டும், இங்கே சென்சார் அமைப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன். என் படங்களில் சின்ன விஷயங்களில் கூட பெரிய அளவில் ஆட்சேபனை தெரிவித்த சென்சார் போர்டு, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திற்கு எந்த சிக்கலும் இல்லாமல் எப்படி சான்றிதழ் கொடுத்தார்கள்..

இதற்குப்பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது.. இதுபோன்ற படங்கள் மூலம் இளைஞர்களின் கவனத்தை போராட்ட களங்களில் இருந்து திசைதிருப்ப மறைமுகமாக முயற்சிகிறார்கள். இயற்கை வளங்களை சுரண்டி எடுப்பதற்காக சொந்த நாட்டு மக்களையே அகதிகளாக மாற்றும் அவலம் இங்கேதான் நடக்கிறது, தமிழ் இனத்தின் மீது மிகப்பெரிய போர் தொடுக்கப்பட்டு இருக்கிறது. உடை என்பது நமக்கு பெரிய ஆயுதம்.. கருப்பு சட்டையை கண்டால் அலறுகிறார்களே, அதனால் தான், காவிரியை நாம் நிச்சயமாக மீட்டுக்கொண்டு வந்துவிடுவோம், ஆனால் மீட்டபின் அதை தக்கவைக்கும் முயற்சி என்ன என்பதுதான் கேள்விக்குறி. இங்கிருந்து அள்ளப்படும் மணல் எல்லாம். நமக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்குத்தான் போகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.. இதில் மிகப்பெரிய அரசியல் சூதாட்டம் நடக்கிறது” என தனது குமுறலை கொட்டினார்.

uyir kodu cauveryஅபிசரவணன்உயிர்கொடு காவிரி’சுரேஷ் காமாட்சிநடிகர்கள் அரீஷ்குமார்பூபேஷ் நாகராஜன்மீரா கதிரவன்மைம் கோபிவ.கௌதமன்