பிரமாண்டத்துக்கு பெயர்போன தயாரிப்பு நிறுவனம் யுடிவி மோஷன் பிக்சர்ஸ்.. பாலிவுட்டில் கொடிகட்டி பறக்கும் இந்த நிறுவனம் நான்கைந்து வருடங்களுக்கு முன் தமிழகத்திலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டும் விதமாக உள்ளே நுழைந்தது.. தனஞ்செயனை இணை தயாரிப்பாளராக கொண்டு பெரிய பட்ஜெட் படங்களை தனியாகவும் சிலசமயம் இன்னொரு நிறுவனத்துடன் இணைந்தும் தயாரித்து வந்தது..
இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘யட்சன்’ படத்தோடு தமிழ் சினிமாவில் இருந்து தற்காலிகமாக விடைபெறுகிறது யுடிவி.. இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற ‘யட்சன்’ புத்தக வெளியீட்டு நிகழ்வின் போது தனஞ்செயனே இந்த தகவலை பத்திரிகையாளர்கள் மத்தியில் வருத்ததுடன் பகிர்ந்து கொண்டார்..
தோல்விகளுக்கோ அல்லது பிரமாண்ட பட்ஜெட்டுக்கோ பயந்து வெளியேறும் நிறுவனம் அல்ல யுடிவி. அவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற காரணம், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் புதிதாக விதித்து வரும் கெடுபிடிகள் தான் எனவும் தனஞ்செயன் குறிப்பிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு இருந்து சேனல்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளால், அவை படங்களை வாங்குவதை குறைத்துக் கொண்டன. இதனால் படத்திற்கான சாட்டிலைட் வருமானம் வராமல் பெண்டிங்கிலேயே நிற்கும் சூழ்நிலை.. இதனால் மார்க்கெட்டிங் பாதிக்கப்படுகிறது. அதேபோல பேப்பரிலும் டிவியிலும் விளம்பரம் செய்வதற்கு கொண்டு வந்துள்ள கெடுபிடியும் இன்னொரு காரணம்.
யுடிவி போன்ற நிறுவனங்களுக்கு விளம்பரப்படுத்துதலும் மார்க்கெட்டிங்கும் தான் மிக முக்கியம்.. அதன் மூலம் தங்களது தோல்விப் படத்தை கூட லாபமாக மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு தான். ஆனால் இத்தனை கெடுபிடிகள் இருந்தால் லாபம் வராவிட்டாலும் போட்ட காசைக்கூட எடுக்க முடியாது என்பதால், தமிழ் சினிமாவுக்கு ஒரு தற்காலிக இடைவெளி விட்டுள்ளது யுடிவி..